கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இஸ்ரோ அனுப்பிய மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய்க்கிரகத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில், அதில் வைக்கப்பட்டிருந்த திரவ உச்சநிலை மோட்டார் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரோவால் அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம், கடந்த 300 நாள்களுக்கும் மேல் விண்வெளியில் பறந்து, தற்போது செவ்வாய்க்கிரக ஈர்ப்பு விசைக்குட்பட்ட பகுதிக்கு பயணித்துள்ளது.
நாளை காலை 7.17 மணி 32 நொடிக்கு 440 நியூட்டன் திரவ உச்சநிலை மோட்டார் இயக்கப்பட்டு செவ்வாய்க்கிரக சுற்று வட்டப் பாதையில் மங்கள்யான் விண்கலம் செலுத்த வழிவகை செய்யப்படும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் மங்கள்யான் விண்கலத்தில் வைக்கப்பட்டிருந்த மோட்டார், கடந்த 300 நாள்களுக்கும் மேலாக இயக்கப்படாமல் இருந்ததால், அதை பரிசோதிக்கும் பணி நேற்று 2.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள விண்வெளி தரைக் கட்டுப்பாட்டு மையத்தில் நடைபெற்றதாகவும், அந்த பரிசோதனையில் வெற்றி கிடைத்துள்ளதாகவும் இஸ்ரோ செய்தித் தொடர்பாளர் பி.ஆர்.குருபிரசாத் தெரிவித்தார்.