சென்னை சுட்டிக்கு தேசிய விருது

boy_2255042g

சர்வதேச அளவில் இயற்கை – சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குப் பங்களித்தவர்களுக்கு ‘கோல்ட்மேன் பரிசு’ வழங்கப் படுகிறது. இது ‘பசுமை நோபல் விருது’ என்றும் அழைக்கப்படுகிறது. அதைப் போல இந்தியாவில் இயற்கை – சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குப் பங்களித்து வருபவர்களுக்கு ‘சாங்சுவரி ஏசியா’ இதழ் விருதுகளை வழங்கி வருகிறது. அந்த விருதுப் பட்டியலில் இளம் வயதில் இடம்பிடித்த பெருமையைப் பெற்றிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த விகாஸ் மாதவ். ‘சாங்சுவரி ஏசியா யங் நேச்சுரலிஸ்ட்’ விருதை சமீபத்தில் அவர் பெற்றார்.

சென்னை அடையாறில் உள்ள சிஷ்யா பள்ளியில் விகாஸ் பத்தாம் வகுப்பு படிக்கிறார். ஆனால், படிக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் பறவைகளைப் பின்தொடர ஆரம்பித்துவிடுகிறார். அவர் வளர்ந்துவரும் ஒரு ஒயில்ட்லைஃப் ஃபோட்டோகிராஃபரும்கூட.

அதோ அந்தப் பறவை

ஒன்றாம் வகுப்பு படிக்கும்போது ஸ்கூலில் பார்த்த ஒரு வித்தியாசமான மரங்கொத்திதான், பறவைகள் மீது அவருடைய ஆர்வம் திரும்புவதற்குக் காரணம். வீட்டுக்கு வந்த விகாஸ், அந்தப் பறவை எந்த வகையைச் சேர்ந்தது என்பதைப் புத்தகத்தைப் புரட்டி தெரிந்துகொண்டார். அப்போது நம்மைச் சுற்றி இத்தனை பறவை வகைகள் இருக்கு, அவற்றையெல்லாம் தெரிஞ்சுக்கணும்னு விகாஸ் மனசுக்குள்ள தோணுச்சு.

அதற்குப் பிறகு பறவைகள் மீதான அவரது ஆர்வம் தீவிரமடைந்தது. 3-4வது படிக்கும்போதே அம்மா-அப்பா வாங்கித் தந்த கேமராவுடன் பறவைகளைப் பின்தொடர ஆரம்பித்துவிட்டார்.

“பறவைகளைப் பார்க்க காட்டுக்குத்தான் போகணும்னு அவசியமில்லை. ஒரு பூங்கா, தோட்டத்திலேயே பல வகைப் பறவைகளைப் பார்க்கலாம். பறவைகளை பார்க்குறது ரொம்ப சுவாரசியமாக இருக்கும். அதேநேரம், பறவைகளை அடையாளம் காண்றது ரொம்ப ஈசி இல்ல. அதுக்குக் கொஞ்சம் மெனக்கெடனும். உதாரணமா,

Warbler-ங்கிற கதிர்க்குருவி உள்ளங்கைக்குள் அடங்கிடும், அதிலேயே பல வகைகள் உண்டு. இப்படிப் பறவைகளைப் பத்தி நுணுக்கமா தெரிஞ்சுக்க மெனக்கெடுறது ஒரு சவால்தான். அந்தச் சவாலும் பறவைகளைப் பின்தொடர்றதும் என் மனசை லேசாக்குது” என்கிறார் விகாஸ்.

நாடெங்கும் பறவைகள்

இந்தியாவில் உள்ள 560 பறவை வகைகளை அவர் இதுவரை பார்த்திருக்கிறார். இந்தியாவில் மொத்தம் உள்ள பறவை வகைகளில் கிட்டத்தட்ட பாதி இது, அம்மாடியோவ்! கிழக்கே சுந்தரவனக் காடுகள், வடக்கே இமயமலை, மேற்கே ரான் ஆஃப் கட்ச், தெற்கே தூத்துக்குடி என இந்தியா முழுவதும் பறவைகள், இயற்கையைத் தேடி 30க்கும் மேற்பட்ட இடங்கள்ல அவர் சுத்தியிருக்கார்.

இந்தியாவில் உள்ள பல்வேறு சாரணாலயங்களுக்கு நான் போக முடிஞ்சதுக்கு என் அப்பா நாகராஜனும், அம்மா பிரசன்ன ஸ்ரியாவும்தான் காரணம். அதோட என் ஸ்கூல் பிரின்சிபாலும் ரொம்ப ஃபிரெண்ட்லி என்கிறார்.

இவருடைய அப்பாவும் அம்மாவும் பறவைகளைக் கண்டறிவதற்கான புத்தகங்கள், பைனாகுலர், கேமரா போன்றவற்றை வாங்கிக் கொடுப்பதுடன், எல்லா இடங்களுக்கும் சென்று அவருக்கு வழிகாட்டவும் செய்கிறார்கள். இவருடைய அம்மா வழி தாத்தா தண்டபாணி, ஸூவாலஜிகல் சர்வேயில் ஓய்வு பெற்ற அதிகாரி.

இயற்கை காப்போம்

பள்ளிக்கரணை சென்னையின் மிகப் பெரிய சதுப்பு நிலமாக முன்பு இருந்து. இப்போ சுருங்கிவிட்டது. இதையும், செய்யூர் அனல் மின் நிலையம் அமையவுள்ள பகுதியில் உள்ள ஓதியூர் உப்புநீர் ஏரியையும் பாதுகாக்க வேண்டும் என்று குரல் கொடுத்தவர்களில் விகாஸ் மாதவும் ஒருவர். உலக இயற்கை நிதியம் (டபிள்யு.டபிள்யு.எஃப்.), சென்னை இயற்கையாளர்கள்

சங்கம் (எம்.என்.எஸ்.) நடத்திய ஒளிப்படக் கண்காட்சிகளில் இவருடைய படங்கள் இடம் பெற்றுள்ளன. பிரிட்டனில் உள்ள ஓரியண்டல் பேர்ட் கிளப் என்ற மதிப்புமிக்க அமைப்பில் உறுப்பினர்.

இப்படிப் பறவைகளைப் பார்ப்பது, படம் எடுப்பதுடன் அவற்றைப் பாதுகாக்க வலியுறுத்திப் பேசுவதும் எழுதுவதும் விகாஸுக்கு ரொம்பப் பிடித்தமான விஷயங்கள். ஏற்கெனவே, நேஷனல் பயோடைவர்சிட்டி அத்தாரிட்டி, உலக இயற்கை நிதியம் வழங்கிய விருதுகளையும் பெற்றிருக்கார்.

இதற்கெல்லாம் மகுடம் சூட்டியது போல ‘சாங்சுவரி ஏசியா’ விருது அவருக்குக் கிடைத்தது. அரையாண்டுத் தேர்வு நடப்பதற்கு முன்னதாகத்தான் ‘சாங்சுவரி ஏசியா விருது’க்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இனிப்பான செய்தி அவருக்குக் கிடைத்தது. எதிர்காலத்தில் இயற்கை பாதுகாப்பில் இவர் மிகப் பெரிய பங்காற்றுவார் என்று நம்புவதாக ‘சாங்சுவரி ஏசியா விருது’ பாராட்டுரை சொல்லுது. நிச்சயமா அதுல சந்தேகம் இருக்க முடியாது.

Leave a Reply