டில்லியில் கடந்த சில நாட்களாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் துணைநில ஆளுனர் நஜீப் சங்குக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டு வரும் நிலையில் டில்லிக்கு மாநில அந்தஸ்து கொடுப்பதே இந்த பிரச்சனைக்கு தீர்வாக முடியும் என ஆம் ஆத்மி, மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார். இதற்கு பதிலளிக்கும் விதத்தில் கூறிய மத்திய நிதியமைச்சார் அருண்ஜெட்லி, ‘நாடு முழுவதும் ஒருமித்த கருத்து எட்டப்படும் வரை டில்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட மாட்டாது’ என்று கூறியுள்ளார்.
நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் அருண்ஜெட்லி, ‘நாடு முழுவதும் ஒருமித்த கருத்து எட்டப்பட்டால் மட்டுமே தேசத்தின் தலைநகரான டில்லிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது சாத்தியமாகும். ஆனால், தற்போது வரை அதுபோன்ற நிலை ஏற்படவில்லை. எனவே, டில்லிக்கு மாநில அந்தஸ்து வழங்க இயலாது.
மேலும் டில்லியில் கவர்னர்-முதலமைச்சர் மோதல் காரணமாக டில்லி அரசு சார்பில் பல அரசு அலுவலகங்கள் மூடப்படவும் வாய்ப்புள்ளது. எனவே, இதற்கு தீர்வுக் காணும் வகையில் டில்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரம், மத்திய அரசின் அதிகாரம் ஆகியவற்றை மத்திய உள்துறை ஏற்கெனவே தெளிவாக விளக்கிவிட்டது.
இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்கள் அனைத்தும் முழுக்க முழுக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. இதனைப் புரிந்துகொண்டு டில்லி முதல்வர், ஆட்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். டில்லியில் முதல்வர் கேஜரிவால் தலைமையிலான அரசு பொறுப்பேற்று நூறு நாள்களாகியும் இன்னும் செயல்படாமல் உள்ளது. அரசு இயந்திரம் செயல்பட வேண்டும் என அருண் ஜேட்லி கூறினார்.