அரசு மருத்துவமனைகளில் 22 பச்சிளம் குழந்தைகள் பலியானது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தர்மபுரி, சேலம் ஆகிய இரண்டு மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அடுத்தடுத்து 22 பச்சிளம் குழந்தைகள் மரணம் அடைந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு மருத்துவமனை மருத்துவர்களின் கவனக்குறைவால்தான் குழந்தைகள் இறந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளதால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது..
ஆனால் மருத்துவர்களின் தரப்பில் இருந்து குழந்தைகள் எடை குறைவாக பிறந்ததால் இறந்ததாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 22 குழந்தைகள் இறப்பு தொடர்பாக பத்திரிகை செய்தி அடிப்படையில் தாமே முன்வந்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் அதிரடி விசாரணையில் ஈடுபட்டுள்ளது.
குழந்தைகள் இறந்தது தொடர்பாக 4 வாரத்தில் தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு மற்றும் சேலம், தர்மபுரி மாவட்ட ஆட்சியர்களுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவர் கே.ஜி.பாலகிருஷ்ணன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் சேலம் மருத்துவமனையில் மேலும் இரண்டு குழந்தைகள் இறந்ததாக செய்திகள் வ்ந்துள்ளது. ஆனால் இந்த தகவலை சேலம் மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது.