முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனின் மகனும் அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு செயலாளருமான பி.எச்.மனோஜ் பாண்டியன் அவருடைய பதவியில் இருந்து திடீரென நேற்று நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மாநிலங்களவையின் எம்.பி. பதவி வேட்பாளராக இருக்கும் ஏ.நவநீத கிருஷ்ணன் அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு செயலாளரான பணிபுரிவார் என அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ”அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் பி.எச்.மனோஜ் பாண்டியன் எம்.பி. இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் பொறுப்பில், ஏ.நவநீத கிருஷ்ணன் பி.எஸ்.சி. பி.எல். (முன்னாள் அரசு தலைமை வழக்குரைஞர்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார். கட்சியினர் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனின் மகனான மனோஜ்பாண்டியன், கடந்த 2001 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் சேரன்மகாதேவி தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டவர். இவர் அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு செயலாளராக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நியமிக்கப்பட்டார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் தென்காசி தொகுதி தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களில் முக்கியமானவராக இருந்தார்.
அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருந்து பி.எச்.மனோஜ் பாண்டியன் எதற்காக திடீரென நீக்கப்பட்டார் என்பது குறித்து கட்சியினர் யாருக்கும் தெரியவில்லை..