நவராத்திரி என்பதே, வீட்டில் நடக்கும் குட்டித் திருவிழா தான். வீட்டை அலங்கரித்து, கொலு படிக்கட்டுகளை அமைத்து, பொம்மைகளை அடுக்கி மாவிலை தோரணங்கள் கட்டி, அழகுபடுத்துவதே தனி கலை. அதை எல்லாருக்கும் சாத்தியம் ஆக்குகிறது, ஒரு அமைப்பு.
சென்னை, மயிலாப்பூரில் இயங்கி வரும், தி மயிலாப்பூர் ட்ரையோ என்ற அந்த அமைப்பு, நவராத்திரியின் சிறப்பு, கொலு வைப்பது எப்படி, அதன் அவசியம் என்ன என, எல்லோருக்கும் கற்றுக்கொடுக்கிறது. அந்த அமைப்பை, எஸ்.சுரேந்தர், எஸ்.அபர்ணா, எஸ்.அமர்நாத்,
எம்.சுகதன் ஆகியோர் வழிநடத்தி வருகின்றனர்.
ஆன்மிகம் பற்றிய புரிதலை…எஸ்.சுரேந்தர் கூறியதாவது:கொலு வைப்பதன் அடிப்படை தத்துவத்தை, இளம்பெண்களுக்கு தெரியப்படுத்த, 2003ல் இந்த அமைப்பை உருவாக்கினோம். மார்கழி உற்சவம், தியாகராஜ ஆராதனை, பால குருகுலம், பாலர் சித்திரை கலை விழா என்று, ஆண்டு முழுதும் விழாக்கள் நடத்திக் கொண்டிருக்கிறோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆன்மிகம் சார்ந்த பல கலை நிகழ்ச்சிகளையும் இவர்கள் நடத்தி வருகின்றனர். கொலுவில் எத்தனை படிகள் இருக்க வேண்டும், கொலு எப்படி வைக்க வேண்டும், எந்த மாதிரியான பொம்மைகள் இடம் பெற வேண்டும் என்பது துவங்கி, கொலு முடிந்து எப்படி பொம்மைகளை பாது
காப்பாக வைக்க வேண்டும் என்பது வரை கற்றுத் தருகின்றனர்.ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரிக்கு, இரண்டு வாரங்களுக்கு முன் இவர்கள் வீட்டிலேயே, சிறிய அளவில் ஒருநாள் பயிற்சி நடைபெறுகிறது.
கருத்தை மையமாக வைத்து…இந்த பகுதியில் நடக்கும் கொலு போட்டிகளுக்கு, நடுவராகவும் செயல்படுகின்றனர்.கடந்த, ௨009ல் சென்னை, கபாலீஸ்வரர் கோவிலில், மகாமேரு கொலு என்ற தலைப்பில் இவர்கள் நடத்திய கொலு கண்காட்சி எல்லாரையும் ஆச்சரியப்படுத்தியது.
கடந்த, 2010ல், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில், அல்லிக்கேணி அலங்கார கொலு என்ற தலைப்பில் கொலு அமைத்து இருந்தனர். ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு கோவிலில் கொலு அமைத்து, அந்த பகுதிவாசிகளுக்கு, கொலு குறித்து சொல்லிக் கொடுக்கின்றனர். தற்போது, மதுரையிலும், ஸ்ரீரங்கத்திலும், கொலு வைத்துஉள்ளனர்.