மத்தியப் பிரதேச மாநில தட்டியா மாவட்டத்தின் ரத்தன் நகர் பகுதியில் மந்துளா தேவி கோவில் உள்ளது. இங்கு நவராத்திரி பூஜை நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் மிகச் சிறப்பாக நடைபெறும்.
இந்த வருட நவராத்திரி பூஜையின் ஒன்பதாவது நாள் நிகழ்ச்சிகள் கோவிலில் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அதிகாலையில் இருந்து வழக்கம்போல் பக்தர்கள் கோவிலுக்கு வந்து கொண்டிருந்தனர். கோவிலுக்கு வரும் வழியில் சிந்து நதியைக் கடப்பதற்கு குறுகலான பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
அந்த இடத்தில் வரும்போது கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது பக்தர்கள் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு செல்ல முயன்றதில் காலில் மிதிபட்டும், ஆற்றில் தவறி விழுந்தும் 115 பேர் உயிரிழந்ததாக போலீசார் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. 120-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
சம்பவப்பகுதிக்கு விரைந்த மீட்புப்படையினர் பாதிக்கப்பட்டோர்களை உடனடியாக தட்டியா மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பாதுகாப்பு பணிகளை சரிவர மேற்கொள்ளாத காரணத்தால் அம்மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை கங்காணிப்பாளர் ஆகியோர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.