நவாஸ் ஷெரீப் மறுப்பு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் கவுன்சிலின் பட்ஜெட் கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், “காஷ்மீர் பிரச்சனையை மையமாகக் கொண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே 4-வது போர் எந்த நேரத்திலும் மூளலாம்” என கூறியதாக பிரசித்தி பெற்ற ‘டான்’ நாளிதழ் செய்தி வெளியிட்டது. இது இந்தியாவில் மட்டுமல்லாது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பிரதமர் நவாஸ் ஷெரீப் தான் கூறியதாக வெளியான தகவலை மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மோதலாக உள்ள எந்தவொரு பிரச்சனைக்கும் பேச்சு வார்த்தைமூலம் அமைதி தீர்வு காணவேண்டும் என்பதுதான் பிரதமர் முகமது நவாஸ் ஷெரீப்பின் கருத்து.

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூளும் என்ற வார்த்தைகளை பிரதமர் ஒருபோதும் பயன்படுத்தவில்லை. இது தொடர்பான செய்தி, அடிப்படையற்றது. தவறானது. தீய நோக்கம் கொண்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே சியாச்சின் பனிமலைப் பிரதேசத்தில் இருந்து இந்தியா தனது படைகளை வாபஸ் பெற வேண்டும் என்று பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் கூறுகையில், “சியாச்சின் பனிமலைப் பிரதேசத்தில் இந்தியப்படைகள் நிறுத்தப்பட்டிருப்பது பாகிஸ்தானின் சுற்றுச்சூழலுக்கு கடும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. பாகிஸ்தானில் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. பாகிஸ்தானுக்கு தண்ணீர் ஆதாரமாக அமைந்துள்ள பனி மலையில் இந்திய துருப்புக்கள் பாதிப்பு ஏற்படுத்துகின்றன.

இந்திய துருப்புக்கள் பயன்படுத்தி விட்டு எறிகிற பொருட்கள் பனி மலைக்கு அச்சுறுத்துலாக அமைந்துள்ளது. சியாச்சின் பனி மலையில் இந்திய துருப்புக்கள் இருப்பது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. எனவே துருப்புக்களை இந்தியா திரும்பப்பெற்றுவிட்டு, முன்னுரிமை அடிப்படையில் பேச்சு வார்த்தை நடத்தி சியாச்சின் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்” என்று தெரிவித்தார்.

Leave a Reply