நடிகை வித்யாபாலன் நடித்து இந்தியில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய கஹானி படத்தின் ரீமேக் படம்தான் அனாமிகா. இந்த படம் தமிழில் “நீ எங்கே என் அன்பே” என்ற பெயரில் நாளை வெளியாக உள்ளது. இந்த படத்தில் வித்யாபாலன் நடித்திருந்த கர்ப்பிணி வேடத்தில் நயன்தாரா நடித்துள்ளார்.
இந்நிலையில் நயன்தாரா நடிப்பில் வெளியாகும் கடைசி திரைப்படம் இதுதான் என தெலுங்கு படவுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அனாமிகா படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு நயன்தாரா கலந்து கொள்ள மறுத்ததால், அந்த படத்தின் இயக்குனர் சேகர் கம்முலா, தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தார். தயாரிப்பாளர் சங்கம் எடுத்த அதிரடி முடிவில்படி நயன்தாராவுக்கு தெலுங்கு படத்தில் நடிக்க ஒரு வருடம் தடை விதிக்கப்பட்டது.
இதனால் நயன்தாரா நடித்துக்கொண்டிருக்கும் தெலுங்கு படங்களில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக வேறு நடிகைகள் ஒப்பந்தம் ஆகிவருகின்றனர். நயன் தாரா நடித்து நாளை வெளியாகும் அனாமிகா திரைப்படமே தெலுங்கில் அவரது கடைசி திரைப்படம் என்று கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து நயன்தாரா எவ்வித அதிர்ச்சியையும் வெளிப்படுத்தவில்லை. அவர் தமிழ், மலையாளம், மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பிசியாக இருப்பதாலும், அவருக்கு ரூ.2 கோடி வரை சம்பளம் கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக இருப்பதாகவும், அவர் இதுகுறித்து எவ்வித கவலையும் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
நயன்தாராவை போலவே பிரகாஷ்ராஜுக்கும் ஒருவருடம் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரகாஷ்ராஜ், இயக்குனர் ஸ்ரீவத்லாவின் துணை இயக்குனர் ஒருவரை தரக்குறைவாக பேசியதால் அவருக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.