முறையற்ற வணிக நெறிகள். நெஸ்லே இந்தியா நிறுவனத்திற்கு நோட்டீஸ்
இந்தியாவில் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் மேகி நூடுல்ஸ் தடை விதிக்கப்பட்ட நிலையில் கடந்த 13ஆம் தேதி சில நிபந்தனைகளுடன் மும்பை நீதிமன்றம் மேகி மீதான தடையை நீக்கியது. இந்நிலையில் மேகி நூடுல்ஸ் தயாரிக்கும் நிறுவனமான நெஸ்ட்லே இந்தியா நிறுவனத்தின் மீது ரூ.640 கோடி நஷ்ட ஈடு கோரி மத்திய அரசு தொடர்ந்த வழக்கில் பதிலளிக்க நெஸ்லே நிறுவனத்திற்கு தேசிய நுகர்வோர் தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நெஸ்லே நிறுவனத்தின் 9 வகையான நூடுல்ஸ்களில் அளவுக்கு அதிகமாக காரீயம் உள்ளிட்ட ரசாயன பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து ரூ.640 கோடி நஷ்ட ஈடு கேட்டு மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்னர் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு இன்று தேசிய நுகர்வோர் தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது முறையற்ற வணிக நெறிமுறைகள், நுகர்வு பொருட்கள் குறித்து தவறான தகவலை அளித்தது உள்ளிட்டவை குறித்து விளக்கமளிக்க கோரி நெஸ்லே நிறுவனத்திற்கு நுகர்வோர் தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.