என்டிடிவி இந்தியா சேனலுக்கு 24 மணி நேரம் தடை. மத்திய அரசு அதிரடி உத்தரவு
மிகவும் பரபரப்பான செய்திகளை 24 மணிநேரமும் தந்து கொண்டிருக்கும் என்.டி.டி.வி சமீபத்தில் நடந்த பதான்கோட் தீவிரவாதத் தாக்குதல் குறித்து பொறுப்பற்ற வகையில் செய்தி ஒளிபரப்பிய காரணத்திற்காக அந்த டிவி சேனலுக்கு 24 மணிநேரம் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 2ம் தேதி பஞ்சாப் மாநிலத்தின் பதன்கோட் பகுதியில் இந்திய விமானப்படை தளத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி அதிரடி தாக்குதல் நடத்தினர். 4 நாட்கள் தொடர்ச்சியாக நடந்த இந்த தாக்குதலில், தீவிரவாதிகள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்ட பொஇதிலும் இந்திய தரப்பில் 7 பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாகினர்.
இந்த தாக்குதல் சம்பவத்தின் போது, பொறுப்பற்ற வகையில், சில அதிமுக்கியமான தகவல்களை என்டிடிவி இந்தியா நிறுவனத்தின் இந்தி மொழி டிவி சேனல் ஒளிபரப்பு செய்ததாகவும், இந்த தகவல்கள் தீவிரவாதிகளுக்குக் கூடுதல் தகவல்களை காட்டிக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் புகார் எழுந்தது
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்யப்பட்டதில், இந்த புகாரில் உண்மையிருப்பதாக அரசு முடிவு செய்துள்ளதால், என்டிடிவி இந்தியாவின் இந்தி மொழி டிவி சேனல் ஒளிபரப்புக்கு, 24 மணிநேர தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த தடையை நவம்பர் 9ஆம் தேதியன்று செயல்படுத்தும்படி என்டிடிவி இந்தியா நிர்வாகத்திற்கு, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.