நைஜீரியா நாட்டில் பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல் ஒன்றில் 48 மாணவர்கள் பரிதாபமாக பலியாகி உள்ளனர். இதனால் அந்த நாடே சோகத்தில் மூழ்கியுள்ளது.
நைஜீரிய நாட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள போட்டிஸ்கம் என்ற நகரில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் வகுப்புகள் ஆரம்பமாவதற்கு முன் காலை பிரார்த்தனை செய்வதற்காக மாணவர்கள் மைதானத்தில் கூடியிருந்தனர்.
அப்போது, பள்ளி சீருடையில் மைதானத்திற்கு வந்த தற்கொலைப்படையை சேர்ந்த தீவிரவாதி ஒருவன் தன்னுடைய உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தான். பெரும் சத்தத்துடன் வெடித்த அந்த வெடிகுண்டு காரணமாக அருகில் இருந்த மாணவர்கள் சிதறினர்.
இந்த தாக்குதலில், 48 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் சிதறி பலியாகினர். மேலும், 79 பேர் படுகாயத்துடன் சிகிச்சைக்காக நைஜீரிய அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் போகோ ஹராம் இயக்கமே நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது