நீங்கள் மனசு வைத்தால் உங்கள் வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்வாள்

mahalakshmi பகவானை ஆராதிப்பதை, ஒரு கடமையாக, சாஸ்திரங்கள் சொல்கின்றன. இறைவனை வழிபடாத நாளெல்லாம் வீணான நாள் என்பர். அதனால், காலையிலோ மாலையிலோ இதற்கென்று, சிறிது நேரம் ஒதுக்கி, இறைவனை வழிபட்டால், சகல ஐஸ்வர்யங்களும் உண்டாகும். ஆனால், பூஜை செய்வதற்கென்று, சில விதிமுறைகள் உண்டு. பூஜையின் போது சந்தனம், குங்குமம், புஷ்பம், தூபம், தீபம், நைவேத்யம் மற்றும் வெற்றிலை பாக்கும் வைக்க வேண்டும். கடைசியில், கற்பூர ஆரத்தி காட்ட வேண்டும். இதில், உங்களுக்கு சவுகரிய குறை ஏற்பட்டு, சிலவற்றை பூஜையில் வைக்க முடியா விட்டால், அட்சதாம் சமர்ப்பயாமி என்று சொல்லி விட்டால் போதும். ஒருவர், அப்படி பூஜை செய்த போது, இல்லாத பொருளுக்கெல்லாம், அதன் பெயரைச் சொல்லி, அட்சதாம் சமர்ப்பயாமி என்று 
சொல்லிக் கொண்டே பூஜையை முடித்து விட்டார். பூஜை செய்பவர், சாஸ்திரிகளுக்கு தட்சணை கொடுக்க வேண்டும்.
இவர்தான் எல்லாவற்றுக்கும் பதிலாக, அட்சதை போதும் என்று சொல்லி இருக்கிறாரே… பூஜை முடிந்ததும், தட்சினார்த்தம் அட்சதாம் சமர்ப்பயாமி என்று சொல்லி, தட்சணைக்கு பதிலாக, அட்சதையை நீட்டினாராம், பூஜை செய்தவர். என்ன இது? தட்சணை எங்கே… என்றார் சாஸ்திரிகள். அதுதான் எல்லாவற்றுக்கும் பதிலாக, அட்சதையே போதும் என்றீர்களே… பிடியுங்கள் அட்சதையை… என்றார்.
பூஜையின் போது, தூபம், தீபம், விபூதி, கண்ணாடி, குடை, சாமரம், விசிறி இவைகளை சமர்ப்பணம் செய்வது வழக்கம். தூபத்தில் அக்னி தேவன், தீபத்தில் சிவன், விபூதியில் மகேஸ்வரன், கண்ணாடியில் சூரியன், குடையில் சந்திரன், சாமரத்தில் மகாலட்சுமி, விசிறியில் வாயுதேவன் உள்ளனர். அதனால், இந்த உபசாரங்களோடு பூஜை செய்ய வேண்டும். நைவேத்யத்தின் போது முத்திரை காட்டுவது, துர்தேவதைகளை விரட்டி விடும். எல்லாருமே, மகாலட்சுமி நம் வீட்டுக்கு வர வேண்டும், என்று தான் விரும்புவர். சிலர், மகாலட்சுமி படம் பேட்ட காலண்டரை வாங்கி வந்து, பூஜை அறை அல்லது ஹாலில் மாட்டி திருப்திப்படுவர். விடியற்காலையில் எழுந்ததும் மகாலட்சுமியை தரிசனம் செய்தால் நல்லது என்பதற்காக, சிலர், படுக்கை அறையிலும் மாட்டி வைப்பர்.
maxresdefault (2)
இல்லத்தரசியானவள், காலையில் எழுந்து பல் விளக்கி, குளித்து, நெற்றிக்கிட்டு, தலையை கோதி, வாசல் பெருக்கி, கோலமிட்டு, வீட்டுக்குள் வந்து சுவாமி படத்துக்கு முன் விளக்கேற்றி, நமஸ்காரம் செய்து, முடிந்தால் இரண்டு பூவை போட்டு, அதற்கு பின் தான், காபி விஷயத்தை கவனிக்க வேண்டும். அத்துடன், வீட்டில், வேத கோஷம், துதிப் பாடல்கள் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். வீட்டில் மூலைக்கு மூலை குப்பையை சேர்த்து வைக்கக் கூடாது. அரிசி, பருப்பு போன்ற தானியங்கள் சிதறக் கூடாது. காலையில், முடிந்தால், பசுவுக்கு ஒரு பிடி புல் கொடுப்பது புண்ணியம். வெள்ளிக்கிழமைகளில் பசுவுக்கும், கன்றுக்கும் மஞ்சள் பூசி, குங்குமமிட்டு வலம் வருவது பெரிய புண்ணியம். வீட்டில் ஆச்சார அனுஷ்டானங்கள் இருந்தாலே, மகாலட்சுமி வாசம் செய்வாள். மனசு வைத்தால், இதையெல்லாம் செய்யலாம்.

Leave a Reply