நீரா ராடியா டெலிபோன் உரையாடல் 4 புதிய வழக்கு

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில், நீரா ராடியா டெலிபோன் உரையாடல் தொடர்பாக 4 புதிய வழக்குகளை சி.பி.ஐ. பதிவு செய்தது. கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆலோசகர் நீரா ராடியா, அரசியல்வாதிகள், கார்ப்பரேட் நிறுவன அதிபர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் ஆகியோருடன் டெலிபோனில் பேசிய விவரங்கள், ரகசியமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உரையாடல்களை மத்திய நேரடி வரிகள் வாரியம் பதிவு செய்துள்ளது. அந்த சி.டி.க்களை ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட்டு ஒரு கமிட்டியை அமைத்தது. அக்கமிட்டி, 23 உரையாடல்களில் முறைகேடு நடந்திருப்பதை கண்டுபிடித்தது அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, 14 உரையாடல்கள் பற்றி விசாரணை நடத்துமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டது. அதன்படி, 4 புதிய வழக்குகளை சி.பி.ஐ. பதிவு செய்துள்ளது இவற்றில், ‘டிராய்’ முன்னாள் தலைவர் பிரதீப் பாய்ஜாயுடன் நீரா ராடியா உரையாடிய விவகாரமும் ஒன்று. ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சாதகமாக நடந்து கொள்வது பற்றி அவர்கள் விவாதித்ததாக கூறப்படுகிறது. இரண்டாவது வழக்கு, ரிலையன்ஸ் நிறுவனம், தனது சந்தாதாரர் விவரங்களை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துக்கு சமர்ப்பித்ததில் காணப்படும் முரண்பாடுகள் பற்றியது ஆகும். ரிலையன்ஸ் நிறுவனம் மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது வழக்கு, ‘பெல்’ நிறுவனம் பணப்பட்டுவாடா செய்வதற்காக கமிஷன் பணம் கைமாறியது தொடர்பாக, நீரா ராடியா மீதும், அவருடைய வைஷ்ணவி கம்பெனி மற்றும் பெல் நிறுவன அதிகாரிகள் மீதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. நான்காவது வழக்கு, யுனிடெக் நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் வழங்கியது தொடர்பாக, வைஷ்ணவி கம்பெனியின் முன்னாள் அதிகாரி விஷால் மேத்தா, தொலைத்தொடர்பு துறை மற்றும் யுனிடெக் அதிகாரிகளுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளது.தற்போது பதிவு செய்யப்பட்டு இருப்பது, பூர்வாங்க விசாரணை ஆகும். முதல் நோக்கிலேயே ஆதாரம் இருப்பது தெரிய வந்தால், இது முறையான வழக்காக பதிவு செய்யப்படும். தமிழ்நாடு அரசுக்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தாழ்தள சொகுசு பஸ்கள் சப்ளை செய்தது தொடர்பான விவகாரம், சி.பி.ஐ.யின் சென்னை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் விரைவில் பூர்வாங்க விசாரணை பதிவு செய்யப்படும் என்று சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Reply