நேதாஜி குடும்பத்தினரை நேரு அரசு உளவு பார்த்தது என்று வெளியாகி உள்ள புதிய தகவல்களால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
சுதந்திர போராட்டத்தின்போது, 1939 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு ஆகியோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் காங்கிரசில் இருந்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விலகினார். பின்னர் அவர் ஜெர்மனி மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சென்று இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி இந்தியாவில் வெள்ளையர்களுக்கு எதிராக போராடினார்.
நேதாஜி, 1945 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 18 ஆம் தேதி தைவான் நாட்டில் நடந்த விமான விபத்தில் இறந்துவிட்டதாக கூறப்பட்டது. ஆனாலும், அதை நேதாஜியின் குடும்பத்தினரோ, அவருடைய ஆதரவாளர்களோ ஏற்கவில்லை. இந்த விமான விபத்து சம்பவத்துக்கு பின்பு, நேதாஜி சோவியத் ரஷியா நாட்டில் காணப்பட்டதாகவும் கூறப்படுவது உண்டு. இதனால், நேதாஜி இறந்தாரா, உயிரோடு இருக்கிறாரா என்ற சர்ச்சை இன்று வரை நீடித்து வருகிறது..
மேலும், 40 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரித்து வரும் அவரை பற்றிய ரகசிய கோப்புகளை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. அவற்றை வெளியிட்டால், மேற்கு வங்க மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலையும், நமது நட்பு நாடுகள் சிலவற்றுடன் உறவுகள் பாதிக்கப்படும் என்பதால் அந்த கோப்புகள் பகிரங்கமாக வெளியிடப்படாமல் பாதுகாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேதாஜியின் நெருங்கிய உறவினர்களான சிசிர்குமார் போஸ் (நேதாஜியின் சகோதரர் மகன்), அமியாநாத் போஸ், அவருடைய ஜெர்மனி நாட்டு மனைவி எமிலி சூசென்கல் ஆகியோர் 1948 ஆம் ஆண்டு நேரு பிரதமராக இருந்த காலம் முதல் 1968 ஆம் ஆண்டு வரை உளவு பார்க்கப்பட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர்கள், உளவுத்துறையின் வளையத்துக்குள் இருந்துள்ளனர். அவர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் அனுஜ் தர் என்னும் எழுத்தாளர் எழுதிய ‘இண்டியாஸ் பிக்கஸ்ட் கவர்-அவ்’ என்ற புத்தகத்தில் நேதாஜியின் மர்ம மரணம் தொடர்பான இந்த தகவல்கள் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதில் தேசிய ஆவண காப்பகத்தில் சில மாதங்களுக்கு முன்பு வரை பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்த 2 முக்கிய கோப்புகள் மேற்கோள் காட்டப்பட்டு உள்ளன. அதுபற்றி அனுஜ்தர் கூறும்போது, ‘ரகசியமான இந்த கோப்புகள் இரண்டும் தவறுதலாக தேசிய ஆவண காப்பகத்துக்கு வந்துவிட்டது. இந்த கோப்புகள் முக்கிய தகவல்களைக் கொண்டவை. ஏனெனில் அவற்றில் ஒவ்வொரு சிறு விஷயமும் உன்னிப்பாக கவனித்து எழுதப்பட்டு இருக்கிறது” என்றார்.
உளவு பார்க்கப்பட்டது தொடர்பான கோப்புகள் பலவற்றில் உளவுத்துறை அதிகாரிகள் நேதாஜி குடும்பத்தினரின் தொலைபேசி உரையாடல்கள் தொடர்பாக கையால் எழுதப்பட்ட ஆவணங்களாக காணப்படுகின்றன. இந்த கோப்புகள் மூலம் அமியாநாத் போஸ் கொல்கத்தாவில் வசித்தபோதும், டெல்லி உள்ளிட்ட இந்திய நகரங்களிலும், வெளிநாடுகளுக்கு பயணம் சென்றபோதும் அவருடைய நடவடிக்கைகள் உளவு பார்க்கப்பட்டு உள்ளதும் தெரிய வந்திருக்கிறது.
மேலும், நேதாஜியின் ஜெர்மனி நாட்டு மனைவி எமிலி சூசென்கல், சிசிர்குமார் போஸ், பிரபல வரலாற்று நிபுணர் லியோனார்டு கார்டன் மற்றும் ஜப்பான், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் வசித்தவர்களுக்கு எழுதிய கடிதங்களும் உளவு பார்க்கப்பட்டு உள்ளன. அந்த கடிதங்கள் அனைத்தும் மத்திய உளவுத்துறையால் பிரித்து பார்க்கப்பட்டு இருப்பதுடன் அவை நகல்களும் எடுக்கப்பட்டு இருக்கின்றன. நேதாஜி இறந்துவிட்டதாக கூறப்பட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகும் எமிலி சூசென்கல் பற்றி எழுதும்போது நேதாஜியின் மனைவி என்பதை உளவுத்துறையினர் தவறாமல் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
நேதாஜி குடும்பத்தினர் உளவு பார்க்கப்பட்டது குறித்து வெளியாகி உள்ள தகவல் பற்றி பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளர் எம்.ஜே.அக்பர் கூறும்போது, ”நேதாஜி மீது காங்கிரஸ் வைத்திருந்த அச்சத்தையே இது காட்டுகிறது. காரணம், காங்கிரசுக்கு எதிரான பலம்மிக்க தலைவராக அவர் இருந்து உள்ளார். இதனால்தான் காங்கிரஸ் இந்த உளவு வேலையை பார்த்து உள்ளது” என்று கூறி உள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரி கூறுகையில், ”இதுபோல் எதுவும் நடக்கவில்லை. இந்த செய்தி தவறானது. உளவு பார்ப்பது காங்கிரஸ் கலாசாரம் அல்ல. நேருவும், நேதாஜியும் இணக்கமான உறவுடன்தான் இருந்தனர். மேலும், நேதாஜியின் குடும்பத்தினர், உளவு பார்க்கப்பட்டதாக வெளியாகி உள்ள தகவல் பற்றி ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை” என்று தெரிவித்து உள்ளார்.
thanks to vikatan.com