நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தலில், ஆளுங்கட்சியின் மிரட்டலுக்கு பயந்தே பாரதிய ஜனதா கட்சியின் மேயர் வேட்பாளர் வெள்ளையம்மாள் வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளார் என அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
நெல்லைமாநகராட்சி பா.ஜ.க. மேயர் வேட்பாளர் வெள்ளையம்மாள், நேற்று தனது வேட்புமனுவை திடீரென வாபஸ் பெற்றார். இதுகுறித்து, அக்கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜன் கமலாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் மற்ற கட்சிகள் போட்டியிட தயங்கிய நிலையில் ஜனநாயக கடமையை ஆற்றும் வகையில் பா.ஜ.க. களத்தில் நிற்கின்றது. ஆனால், பல இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் போட்டியிடக்கூடாது என்று மிரட்டப்பட்டும், தாக்குதலுக்கு உள்ளாகியும் வருகின்றனர். இது குறித்து போலீசில் புகார் தெரிவித்தால் மனுக்களை வாங்க மறுக்கின்றனர்.
இந்த நிலையில், திருநெல்வேலி பா.ஜ.க. மேயர் வேட்பாளர் வெள்ளையம்மாள் கடந்த 3 நாட்களாக மிரட்டப்பட்டு வந்தார். இது தொடர்பாக, கட்சியின் தலைமைக்கும் தகவல் தெரிவித்து வந்தார். இந்த நிலையில் அவரை மிரட்டி கையெழுத்து வாங்கி மனுவை வாபஸ் பெற வைத்துள்ளனர். மேலும், அவரை அ.தி.மு.க.வில் சேர்த்துக்கொள்வதாகவும் கூறியுள்ளனர். இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
பெண்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற கருத்து தற்போது வலுத்து வரும் நிலையில், பெண் வேட்பாளர் மிரட்டப்படுகிறார் என்றால் தேர்தலில் பெண்கள் எப்படி நிற்க முடியும். எதிர்க்கட்சிகள் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்ற மோசமான நிலை தற்போது தமிழகத்தில் உருவாகியுள்ளது.
மனுதாக்கல் செய்யப்பட்ட பல இடங்களில் பா.ஜ.க.வினரின் மனுக்கள் ஏற்கப்பட்டதாக முதலில் நோட்டீசு போர்டில் தகவல் வெளியிடப்படுகிறது. அதன் பின்னர், மனு நிராகரிக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது எந்த விதத்தில் நியாயம்.
ஆளுங்கட்சியின் நடவடிக்கைக்கு முடிவு கட்டும் வகையில் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கியிருக்கக்கூடிய கட்சிகள் ஒருங்கிணைந்து பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். பா.ஜ.க. வேட்பாளர்களை மிரட்டினாலும் அதனை அஞ்சாமல் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். தேர்தல் ஆணையம் தேர்தல் நியாயமாகவும், நடுநிலையுடனும் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனநாயக முறையில் பிரசாரம் செய்யவும் அனுமதிக்க வேண்டும்.