திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் நேற்று நடந்தது. நெல்லையப்பர், காந்திமதியம்மன் கோயிலில் நடக்கும் முக்கிய விழாக்களில் ஒன்றான தைப்பூச விழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கோயிலில் தல புராணம் உருவாக காரணமான, நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் நேற்று காலை நடந்தது.
முன்னொரு காலத்தில் வேதபட்டர் என்பவர் பொதுமக்களிடம் சேகரித்த, நெல் மணிகளை சுவாமிக்கு அமுது படைப்பதற்காக, காயப்போட்டிருந்தார். தாமிரபரணிக்கு குளிக்கச்சென்றுவிட்டு திரும்பும்போது மழை பெய்தது. அந்த பகுதி முழுவதும் மழை பெய்திருந்தது. ஆனால் காயப்போட்டிருந்த நெல் மீது மழை நீர் விழாமல் சுவாமியே வேலியிட்டு காத்திருந்தது போல இருந்தது. இதனை வேதபட்டர், மன்னரை அழைத்து காண்பித்தார். அப்போது முதல் இந்த தலம், திருநெல்வேலியானது. நெல்லையப்பர் சன்னதியில் நந்தி முன்பாக நடந்த நிகழ்வில் நெல்குவித்து வைத்து வழிபாடு செய்யப்பட்டது. தீபாராதனை நடந்தது.
நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். இரவு பஞ்சமூர்த்திகளுடன் சுவாமி அம்பாள் வீதியுலா நடந்தது. வரும் பிப்.,3ம் தேதி தைப்பூச தீர்த்தவாரி விழா கைலாசபுரம் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள சிந்துபூந்துறை மண்டபத்தில் நடக்கிறது. பிப்.,4ம் தேதி இரவு ஏழு மணியளவில் நெல்லையப்பர் கோயில் சவுந்திரசபா மண்டபத்தில் நடராஜரின் திருநடனம் நடக்கிறது. ஐந்தாம் தேதி நெல்லையப்பர் கோயிலின், அலங்கரிக்கப்பட்ட வெளித்தெப்பத்தில் பஞ்சமூர்த்திகளுடன் தெப்பத்திருவிழா நடக்கிறது.