நெல்சன் மண்டேலா நினைவேந்தல் நிகழ்ச்சி

தென் ஆப்பிரிக்காவில் நடந்த நெல்சன் மண்டேலா நினைவேந்தல் நிகழ்ச்சியில் 70 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினார்கள். காலனி ஆதிக்கம், நிறவெறியை எதிர்த்து போராடிய உன்னத தலைவரும், தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியுமான நெல்சன் மண்டேலா மறைவுக்கு உலகம் முழுவதும் கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அவருடைய இறுதிச்சடங்குகள் 15 ஆம் தேதி சொந்த ஊரில் நடைபெறும் நிலையில், நேற்று மண்டேலா நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஜோகன்னஸ்பர்க் அருகில் உள்ள பிரமாண்ட அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் உலகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த 70-க்கும் மேற்பட்ட நாட்டு தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள். மழையையும் பொருட்படுத்தாமல் லட்சத்துக்கு மேற்பட்ட பொது மக்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று தங்கள் மனம் கவர்ந்த தலைவருக்கு ஆடல்-பாடலுடன் பிரியாவிடை அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்தியாவிலிருந்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தலைமையில், காங்கிரஸ் தலைவர் சோனியா, எதிர்கட்சி தலைவர் சுஷ்மாசுவராஜ், மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யச்சூரி, பகுஜன்சமாஜ் கட்சி தலைவர் சதீஷ் மிஸ்தா ஆகியோர் சென்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

2 மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் உலக தலைவர்கள் 6 பேர் மட்டுமே உரையாற்றினார்கள். அவர்களில் பிரணாப் முகர்ஜியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடன் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, பிரேசில் நாட்டு தலைவர் டில்மா ரூசுப், நபீயாவின் பொகம்பா, கியூபாவின் ரவுல் காஸ்டிரோ மற்றும் சீன துணை ஜனாதிபதி லீ-யுவான்சோ ஆகியோரும் பேசினார்கள்.

மேடையில் தென் ஆப்பிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஜூமா அருகில் பிரணாப் முகர்ஜி அமர்ந்து இருந்தார். அவர் பேசும்போது நிலையான அரசியல் மற்றும் சமூக மாற்றங்களை செய்த போற்றுதலுக்கு உரிய தலைவர் என்றும், அநீதிக்கு எதிரான தனது சத்தியாகிரக போராட்டத்தை இறுதி வரை உறுதியாக தொடர்ந்தவர் என்றும், நெல்சன் மண்டேலாவுக்கு புகழாரம் சூட்டினார்.

அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமா நினைவு நிகழ்ச்சியில் பேசும்போது 20 ஆம் நூற்றாண்டின் கடைசி விடுதலை போராட்ட தலைவர் என்றும், “பிரமாண்ட வரலாறு” என்றும் மண்டேலாவை புகழ்ந்தார். இந்தியாவின் மகாத்மா காந்தியை போல் மண்டேலாவும் ஒத்துழையாமை இயக்க போராட்டம் நடத்தியதையும் அவர் சுட்டிக்காட்டினார். ஒபாமா மேடையில் பேச அழைக்கப்பட்டபோது அரங்கில் கூடியிருந்தவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

பேசுவதற்காக ஒபாமா மேடைக்கு சென்றபோது கியூபா நாட்டின் ஜனாதிபதி ரவுல் காஸ்டிரோவுடன் கை குலுக்கினார். அமெரிக்கா-கியூபா இடையே கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக விரோதம் இருந்து வரும் நிலையில், ஒபாமா அவருடன் கை குலுக்கியது பார்வையாளர்களை வியப்படைய வைத்தது. ஒபாமா கை குலுக்கியபோது ரவுல் காஸ்டிரோ புன்னகைத்தார்.

மண்டேலாவின் மனைவி கிரேஸ் மாச்சல் மேடைக்கு வந்து அமர்ந்தபோதும் பலத்த மகிழ்ச்சி ஆரவாரம் எழுந்தது. மண்டேலாவின் முன்னாள் மனைவி வின்னி மண்டேலாவும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.

ஐ.நா.சபை பொதுச்செயலாளர் பான் கி மூன், ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீது கர்சாய், பிரான்சு ஜனாதிபதி ஹாலண்டே மற்றும் அமெரிக்கா, இங்கிலாந்தின் முன்னாள் ஜனாதிபதி, பிரதமர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

முன்னதாக பிரணாப் முகர்ஜி, தென் ஆப்பிரிக்காவுக்கு புறப்படுவதற்கு முன்பு கூறும்போது, இந்த நிகழ்ச்சியில் தாங்கள் கலந்து கொள்வது, மண்டேலா எந்த அளவுக்கு இந்தியாவின் மீது அன்பும் மதிப்பும் வைத்திருந்தார் என்பதை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்டார்.

“மண்டேலாவின் வாழ்க்கை மனித ஆற்றல் மற்றும் துணிச்சலுக்கு வாழும் உதாரணமாக திகழ்கிறது. காலனி ஆதிக்கத்துக்கு எதிராக போராடிய கடைசி தலைவர் அவர். மகாத்மா காந்தியின் பிரதிபலிப்பாக விளங்குவதால் அவருடைய போராட்டம் நமக்கு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது” என்றும், அவர் பாராட்டு தெரிவித்தார்.

Leave a Reply