நேபாளத்தில் இந்திய டிவி சேனல்கள் திடீர் முடக்கம். காரணம் என்ன?

நேபாளத்தில் இந்திய டிவி சேனல்கள் திடீர் முடக்கம். காரணம் என்ன?

nepalசமீபத்தில் நேபாள நாட்டில் அமலுக்கு வந்த புதிய அரசியல் சட்டத்திற்கு அங்குள்ள மாதேசிகள் என்றழைக்கப்படும் இந்திய வம்சாவளி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் இந்தியாவில் இருந்து வருகிற சரக்கு லாரிகளை நேபாளத்துக்குள் அனுமதிக்காததால் நேபாளத்தில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மாதேசிகளுக்கு இந்தியா மறைமுகமாக உதவுவதாக சந்தேகம் அடைந்துள்ள நேபாளத்தில் இந்திய டி.வி. சேனல்கள் முடக்கப்பட்டுள்ளன. இந்த பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என இந்தியா அறிவித்துள்ளது.

மாதேசிகளுக்கு ஆதரவாகவும், அவர்களை இந்தியா தூண்டி விடுவதாகவும் கூறும் நேபாளம், இந்தியாவுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் அங்குள்ள கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள், இந்திய டி.வி. சேனல்கள் அனைத்தையும் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி முடக்கி விட்டனர். இதனால் அங்கு வாழ்கிற இந்திய வம்சாவளி மக்கள் இந்திய டி.வி. சேனல்களை பார்க்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த பிரச்சினை தொடர்பாக நேபாளத்துக்கான இந்திய தூதர் ரஞ்சித் ரே கூறியதாவது:- நேபாளத்தில் இந்தியாவுக்கு எதிரான உணர்வு வளர்ந்து வருவது கவலை அளிப்பதாக அமைந்துள்ளது. இதை உள்நோக்கம் கொண்டதாக குறிப்பாக அரசியல் அல்லது பிற வகையிலான உள்நோக்கம் கொண்டதாகத்தான் நாங்கள் கருத வேண்டி உள்ளது.

இந்தியாவுக்கு எதிரான மனப்போக்கு வளர்ந்து வருவது நல்லதல்ல. இந்த மனப்போக்கை ஊக்குவிப்பது, இந்தியாவுக்கும், நேபாளத்துக்கும் சம அளவில் கேடு விளைவிக்கும். ஒரு பிரிவினர், இந்திய எதிர்ப்பு உணர்வினை ஊக்குவித்து வருகின்றனர். இது அவர்களுக்கு சில வழிகளில் உதவுகிறது.

நேபாளத்தை பொறுத்தமட்டில், சில மனக்குறைகள் தீர்க்கப்பட வேண்டும் என கருதுகிறது. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம். இவை அரசியல் பிரச்சினைகள். எனவே பேச்சு வார்த்தை மூலம் தான் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து நேபாளத்தில் தவறான அபிப்பிராயம் உள்ளது. இந்த மோதல் போக்குக்கு முடிவு காணாவிட்டால், அது கடும் விளைவுகளை ஏற்படுத்தி விடும். நேபாளத்தில் நீண்ட ஸ்திரத்தன்மைக்கு இது மிகவும் முக்கியம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Leave a Reply