நேபாள நாட்டில் நேற்று ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்ததால் அந்த இடிபாடுகளில் சிக்கி சுமார் 1500 பேர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அதுமட்டுமின்றி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் படுகாயங்கள் அடைந்ததோடு தங்கள் வீடு மற்றும் பொருட்களை இழந்து நடுத்தெருவில் நிற்பதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
முதலில் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 என்ற அளவில் பதிவானதாக தகவல் வெளியானது. அதன்பின்னர், மக்கள் தொகை அதிகம் உள்ள தலைநகர் காட்மாண்டுவை மீண்டும் உலுக்கிய நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவாகியிருந்தது தெரியவந்தது. குடியிருப்புகள் மற்றும் கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அலறியபடி வெளியேறி சாலைகளில் ஓடி வந்தனர்.
பூகம்பம் நிகழ்ந்த சிறிது நேரத்தில் எங்கு திரும்பினாலும் காயமடைந்தவர்கள் அழுகுரல்கள் பரிதாபமாக கேட்டது. ஆம்புலன்ஸ் வாகனங்கள் சைரன் ஒலி எழுப்பியபடி பூகம்பம் நிகழ்ந்த பகுதியை நோக்கி சென்றன. அரசு ஹெலிகாப்டர்கள் வானில் வட்டமடித்தபடி மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன. காட்மாண்டுவில் இருந்த 19ஆம் நூற்றாண்டு பழமையான 9 மாடிக் கட்டடமான “தரகாரா” டவர் முழுமையாக இடிந்து விழுந்தது. அக்கட்டடத்தில் இருந்த 200 பேர் மண்ணோடு மண்ணாக புதையுண்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது. இதுரை ஒரே ஒருவரின் உடல் மற்றும் கிடைத்துள்ளது.
பீஸ்மன் டவர் என்றும் அழைக்கப்படும் இக்கட்டடம் 61.88 மீட்டர் உயரமானது. காட்மாண்டுவின் சுந்தரா என்னும் மையப்பகுதியில் 1832 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இக்கட்டடம் அதன் கட்டடக் கலைக்காக யுனோஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டதாகும்.
மேலும் இந்த நிலநடுக்கும் நீடிக்கும் வாய்ப்பு இருப்பதாக புவியியல் அறிஞர்கள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால், காட்மாண்டுவில் உள்ள விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தினால் நேபாளம் மிக மோசமாக உருக்குலைந்துள்ள நிலையில், நேபாள பிரதமர் ராம் பரன் யாதவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசி, நிலைமையை கேட்டறிந்தார். பிரதமரிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து உடனடியாக இந்திய அரசு அனுப்பி வைத்த தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 2 விமானங்கள் நிவாரண பொருட்களுடன் தலைநகர் காத்மாண்டுவில் தரை இறங்கி உள்ளது. இதுதவிர மேலும் 3 விமானங்களும் நிவாரண பொருட்களுடன் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை செயலர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
.