நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக நேபாளத்தின் தலைநகர் காட்மண்ட் நகரின் பூகோள அமைப்பே மாறிவிட்டதாக அதிர்ச்சி தரும் தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
நேபாள தலைநகர் காத்மாண்டு முன்பு இருந்த இடத்தில் இருந்து 10 அடி தூரம் தெற்காக நகர்ந்துள்ளதாக புவியியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் இந்த பூகம்பம் காரணமாக இமயமலையின் உயரத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.
நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் இதுவரை 4300-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாகவும் சுமார் 8000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
80 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிக அளவில் நிகழ்ந்த இந்த நிலநடுக்கத்திற்கு பின் ஏற்பட்ட ஒலி அலைகள் மூலம் பெறப்பட்ட நிலஅதிர்வு தரவின் படி, காத்மாண்டு நகரம் 10 அடி தூரம் தெற்காக நகர்ந்துள்ளதாகவும், இது மிகவும் ஆச்சரியம் அளித்தக்கதக்க மாற்றம் என்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் புவியியல் வல்லுனர் ஜேம்ஸ் ஜாக்சன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
அவரது ஆய்வறிக்கையும் அடிலெய்டு பல்கலைக்கழகத்தின் புவியியல் விஞ்ஞான துறையின் தலைவரான சாண்டி ஸ்டியசியின் ஆய்வறிக்கையும் ஒன்றாக உள்ளதாக கூறப்படுகிறது. யூரேசியாவிடம் இருந்து இந்திய கண்டத்தை வேறுபடுத்தும் இமயமலை பகுதியில் பூமி தட்டுகள் 10 டிகிரி அளவுக்கு வடக்கு மற்றும் வடகிழக்காக நகர்ந்ததாக இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் இந்த நிலநடுக்கத்தால் உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்டில் மி.மீ அளவிலான மாற்றங்களே ஏற்பட்டுள்ளதாகவும் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.