இந்திய தூதரை திரும்பப் பெற்றது நேபாளம். அரசை கவிழ்க்க இந்தியா முயற்சியா?
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளம் நேற்று திடீரென இந்தியாவுக்கான நேபாளத் தூதரை திரும்பப் பெற்றது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேபாள அரசைக் கவிழ்க்க முயன்றதாக குற்றம் சாட்டியுள்ள நேபாள அரசு இந்திய தூதரான தீப் குமார் உபாத்யாயவை திரும்பப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நேபாளம் நாட்டின் எதிர்க்கட்சியான நேபாள காங்கிரஸின் தலைவராக இருந்த தீப் குமார் உபாத்யாய, இந்தியாவுக்கான அந்நாட்டின் தூதராக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் அரசுக்கு ஒத்துழைக்காதது, அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை தூண்டியது, மாவோயிஸ்ட் கட்சியுடன் இணைந்து நேபாளப் பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசைக் கவிழ்க்கும் முயற்சிகளில் ஈடுபட்டது ஆகிய குற்றச்சாட்டுகள் தூதர் தீப் குமார் மீது சுமத்தப்பட்டு அதன் காரணமாக தூதர் பொறுப்பிலிருந்து அவரை நேபாள அரசு விடுவித்தது.
இதுகுறித்து நேபாளப் பாதுகாப்புத் துறை அமைச்சர் பீம் ராவல் தலைநகர் காத்மாண்டில் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: நேபாளத்துக்கான இந்தியத் தூதர் ரஞ்சித் ராணேயுடன் இணைந்து, நேபாளத்தின் மேற்குப் பகுதிகளில் உள்ள மாவட்டங்களுக்கு, தீப் குமார் உபாத்யாய அண்மையில் ரகசியப் பயணம் மேற்கொண்டுள்ளார். தனது அதிகார வரம்பை மீறிய உபாத்யாயவின் இந்தச் செயல்பாடு, நேபாள அரசை கவிழ்க்கும் அவரது முயற்சியை வெளிப்படுத்துவதாக உள்ளது. தூதர் பொறுப்பிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளதற்கும், நேபாள குடியரசுத் தலைவர் பிந்தியா தேவி பண்டாரியின் இந்தியப் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று பீம் ராவல் தெரிவித்தார்.