ஆதரவை திடீரென வாபஸ் செய்த கூட்டணி கட்சி. நேபாளத்தில் ஆட்சி கவிழுமா?
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் பிரதமர் கே.பி.ஒலி தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணியில் இடம் பெற்றிருந்த நேபாள கம்யூனிஸ்டு கட்சி (மாவோயிஸ்டு) அரசுக்கு அளித்து வந்த ஆதரவை நேற்று திடீரென வாபஸ் பெற்றதால் ஆட்சியை இழக்கும் அபாயத்தில் பிரதமர் ஒலி இருப்பதாக கூறப்படுகிறது.
கூட்டணியில் இணையும்போது கொடுத்த வாக்குறுதிகளையும், செய்து கொண்ட ஒப்பந்தங்களையும் நிறைவேற்ற பிரதமர் கே.பி.ஒலி தயங்குவதால், அரசுக்கு அளித்து வந்துள்ள ஆதரவை வாபஸ் பெற்றுள்ள்தாக நேபாள கம்யூனிஸ்டு கட்சி (மாவோயிஸ்டு) தலைவர் பிரசந்தா கூறியுள்ளார்.
பட்ஜெட்டை நிறைவேற்றி விட்டு ஆட்சியை நேபாள கம்யூனிஸ்டு கட்சியிடம் (மாவோயிஸ்டு) ஒப்படைத்து விடுவதாக கடந்த மே மாதம் கே.பி.ஒலி கூறியதாகவும், அதன்படி பிரதமர் நடந்து கொள்ளாததால் ஆதரவை அந்த கட்சி வாபஸ் பெற்றதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில் நேபாள காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் நேபாள கம்யூனிஸ்டு கட்சி (மாவோயிஸ்டு) ஆட்சி அமைய வாய்ப்பு உள்ளதாகவும் இதுகுறித்து நேபாள காங்கிரஸ் கட்சி தலைவர் ஷெர் பகதூர் தியூபாவை பிரசந்தா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.