நெருங்கும் தீபாவளி

5 ஆயிரம் பட்டாசு கடைகள்
தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு அதிகாரிகள் ஆய்வு செய்து அனுமதி வழங்கிய 5,000 கடைகளில் பட்டாசு விற்பனை செய்யலாம் என தெரிய வந்துள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 வாரம் உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பட்டாசு விற்பனை செய்வதற்காக கடை வைக்க அனுமதி கோரி இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் வழங்கியுள்ளனர். தீபாவளிக்காக பட்டாசு தயாரிக்கும் பணியில் சிவகாசியில் உள்ள 800 பட்டாசு நிறுவனங்கள் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகின்றன. வட மாநிலங்களுக்கு பட்டாசுகள் அனுப்பும் பணி சுமார் 90 சதவீதம் நிறைவுற்றது.
இந்நிலையில் தமிழகத்தில் பட்டாசு விற்பனை இந்த வார இறுதியில் தொடங்க உள்ளது. சிவகாசியில் மட்டும் பட்டாசு விற்பனைக்கென உரிய அனுமதி பெற்ற 400 கடைகளில் பட்டாசு விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சிவகாசியில் உள்ள கடைகள் ஆண்டு முழுவதும் இயங்கும் வகையில் உரிய லைசென்ஸ்கள் பெற்றுள்ளன.
இவற்றில் பெரும்பாலான நிறுவனங்கள் நாக்பூர் உரிமம் பெற்று உரிய பாதுகாப்பான குடோன் வசதிகளுடன் இயங்கி வருகின்றன. தற்காலிக உரிமம் பெற்று பட்டாசு விற்பனை செய்வதற்கு தமிழகம் முழுவதும் இதுவரை 5 ஆயிரம் பேர் விண்ணப்பம் வழங்கியுள்ளதாகவும், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அந்தந்த பகுதி காவல் நிலையங்கள், வருவாய் துறை, தீயணைப்பு துறையினர் ஆய்வு செய்து உரிய அனுமதி வழங்குவர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தாண்டு வட மாநிலங்களில் கடந்த மாதம் பெய்த பெரும் மழையால் பட்டாசு விற்பனை இன்னும் விறுவிறுப்பு அடையவில்லை. இதனால் கூடுதல் ஆர்டர்கள் வரவில்லை என பட்டாசு தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.
அடுத்த வாரத்தில் பட்டாசு விற்பனை நன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் பட்டாசு தயாரிக்கும் பணியிலும், வெளியூர்களுக்கு அனுப்பும் பணியிலும், பட்டாசு தயாரிப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply