நேதாஜி விமான விபத்தில் உயிரிழந்தார் என்பதை நம்புகிறேன். நேதாஜியின் மகள் டாக்டர் அனிதா போஸ்
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் விமான விபத்தில் உயிரிழந்தார் என்பதை நம்புவதாகவும், அதே நேரத்தில் அவரது சாம்பல் ஜப்பான் நாட்டில் உள்ள ரங்கோஜி கோயிலில் வைக்கப்பட்டிருப்பதாக பல ஆண்டுகளாக கூறப்பட்டு வரும் நிலையில், அந்த சாம்பல் உண்மையில் நேதாஜியுடையது தானா என்பதை மரபணு சோதனை (டிஎன்ஏ) மூலம் கண்டறிய வேண்டும் என நேதாஜியின் மகள் டாக்டர் அனிதா போஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
சமீபத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்த ரகசிய ஆவணங்களை மத்திய அரசு வெளியிட்டது. இந்நிலையில் ஜெர்மனியில் வசிக்கும் நேதாஜியின் ஒரே வாரிசான அனிதா போஸ், நேற்று பி.டி.ஐ. செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது, ”தைவானின் தைபே நகரில் கடந்த 1945-ம் ஆண்டு நேரிட்ட விமான விபத்தில் எனது தந்தை நேதாஜி உயிரிழந்து விட்டார் என்பதை நான் நம்புகிறேன். அதே நேரம், ஜப்பானின் ரங்கோஜி கோயிலில் வைக்கப்பட்டிருக்கும் நேதாஜியின் சாம்பல் என்று கூறப்படும் சாம்பலை டி.என்.ஏ. பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அப்போதுதான், அந்த சாம்பல் நேதாஜியுடையது தானா என்பது உறுதியாகத் தெரிய வரும்.
நேதாஜி தொடர்பாக இந்திய அரசிடம் இருந்த 100 ரகசிய ஆவணங்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அதில் சில ஆவணங்களை மட்டுமே நான் பார்த்துள்ளேன். அதில், நேதாஜியின் மரணம் தொடர்பான சான்றிதழ் இல்லாதது ஆச்சரியமளிக்கிறது. நேதாஜி தொடர்பான ரகசியங்கள் முழுவதும் வெளிவந்தால், எனக்கு மகிழ்ச்சிதான். எனது தந்தை நேதாஜி குறித்து புத்தகம் எழுதும் திட்டமில்லை. ஆனால், எனது தாயார் எமிலி குறித்து புத்தகம் எழுத உள்ளேன்” என்று கூறினார்.
இந்நிலையில், அனிதா போஸ் அடுத்த மாதம் இந்தியாவுக்கு வரவுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அப்போது, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து, ரங்கோஜி கோயிலில் வைக்கப்பட்டுள்ள நேதாஜியின் சாம்பல் என்பதை உறுதிப்படுத்த மரபணு சோதனை நடத்துவது குறித்து ஜப்பான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்த திட்டமிட்டுள்ளார் என்று தெரிவித்து உள்ளனர்