பிரபல சுதந்திர போராட்ட வீரரும் பிரிட்டிஷாரை எதிர்க்க இந்திய தேசிய ராணுவத்தை தோற்றுவித்தவிருமான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கடந்த 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 18ஆம் தேதி நடந்த ஒரு விமான விபத்தில் மரணம் அடைந்ததாக கூறப்பட்டது. ஆனால் அதற்கு பின்னரும் அவர் பல வருடங்கள் வாழ்ந்ததாகவும் ஒரு தகவல் கூறுகின்றது. இந்நிலையில் நேதாஜியின் மரணம் குறித்த மர்மங்களை வெளியிட வேண்டும் என கடந்த சில நாட்களாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. மத்திய மற்றும் மேற்குவங்க மாநில அரசுகளிடம் உள்ள நேதாஜி குறித்த ஆவணங்களை வெளியிட வேண்டும் என்று நேதாஜியின் உறவினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பிரதமர் மோடியிடம் நேரில் பேச்சுவார்த்தை நடத்த விரும்பிய நேதாஜியின் உறவினர்கள் அவரை நேரில் சந்திக்க அனுமதி கேட்டனர். இதற்கு பிரதமர் அலுவலகம் தற்போது மே 17ஆம் தேதி அனுமதி கொடுத்துள்ளது.
இதுகுறித்து நேதாஜியின் பேரன் சந்திர குமார் போஸ், கொல்கத்தாவில் நேற்று பத்திரிகையாளர்களிடம் கூறியபோது, ‘பிரதமரை சந்திக்க அடுத்த மாதம் 17ஆம் தேதி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் பதிலளித்துள்ளது. இந்த சந்திப்பின்போது மத்திய, மாநில அரசு ஆவணங்களில் உள்ள விவகாரங்கள் குறித்து ஆராய சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்குமாறும் வலியுறுத்தவுள்ளதாகவும், அந்தக் குழுவில், பிரதமர் அலுவலகம், வெளியுறவுத் துறை, உளவுத் துறை ஆகியவற்றின் பிரதிநிதிகள், மூத்த பத்திரிகையாளர் ஒருவர், நேதாஜி வரலாற்று ஆராய்ச்சியாளர் ஒருவர் ஆகியோர் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க உள்ளதாகவும் நேதாஜி காணாமல் போனது தொடர்பாக, இதுவரை நியமனம் செய்யப்பட்ட அனைத்து விசாரணைக் குழுக்களிலும் அதிகார வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இடம்பெற்றிருந்ததாகவும், எனவே இனி வரும் குழுவில் அதிகார வர்க்கத்தில் இல்லாத நபர்களும் இடம்பெறுவது அவசியம் என்று கோரிக்கையை வலியுறுத்தவுள்ளதாகவும் சந்திர குமார் போஸ் கூறினார்.