மேலும் இரண்டு சலுகைகளை பெற ஆதார் அட்டை அவசியம். மத்திய அரசு அதிரடி
ஒருபக்கம் ஆதார் அட்டையை எந்த மானியம் பெறுவதற்கும், எந்தவித சலுகைகள் பெறுவதற்கும் கட்டாயமாக்க கூடாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தர்விட்டு வருகிறது. அதே நேரத்தில் இன்னொரு பக்கம் ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே பல சலுகைகள் கிடைக்கும் என்ற அறிவிப்பை மத்திய அரசு அறிவித்து வருகிறது.
ஏற்கனவே வங்கிக்கணக்கு முதல் கேஸ் இணைப்பு வரை ஆதார் அட்டை இணைப்பு கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் தற்போது புதிய இணைப்பாக ரேஷனில் மண்ணெண்ணெய் மானியம் பெற ஆதார் கார்டு கட்டாயம் என்றும் இனிமேல் மண்ணெண்ணெய்க்கான மானியமும் வங்கிகணக்கில் செலுத்தப்பட உள்ளதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதேபோல் கழிவறை கட்டுவதற்கான மத்திய அரசின் மானியம் ரூ.4000 பெறவும் ஆதார் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. புதியதாக ஆதார் அட்டை பெறவும், ஆதார் அட்டையில் மாற்றம் செய்யவும் அதிகாரிகள் பொதுமக்களை அலைக்கழித்து வருவதாக கூறப்படும் நிலையில் மத்திய அரசின் இந்த புதிய உத்தரவு பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.