ஸ்மார்ட் போன்களில் விதவிதமான செயலிகள் (ஆப்ஸ்) அறிமுகமாகிவரும் நிலையில், இப்போது சாவியை நகலெடுப்பதற்கும் ஒரு செயலி அறிமுகமாகியுள்ளது.
நியூயார்க் நகரைச் சேர்ந்த கீமீ (KeyMe) எனும் நிறுவனம் இந்தச் செயலியை அறிமுகம் செய்திருக்கிறது. வீட்டுச் சாவியோ அல்லது அலுவலகச் சாவியோ அதைக் காமிராவில் கிளிக் செய்து இந்தச் செயலி வழியே அனுப்பினால் அந்தச் சாவிக்கான நகலை உருவாக்கி நகல் சாவியை செய்துத் தருமாம் கீமீ.
சாவியை நகலெடுக்க வெள்ளைப் பின்னணியில் இரு பக்கம் புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டுமாம். செயலி தவிர நிறுவனம் அமைத்துள்ள மையங்களிலும் சாவியை ஒரு நிமிடத்தில் நகலெடுக்கலாமாம். நகல் சாவி தயாரிக்க இது எளிய வழி என்றாலும் கள்ளச்சாவி தயாரிப்பு அச்சத்தையும் ஏற்படுத்தாமல் இல்ல.
ஆகையால் சாவி கோருபவரின் கைரேகையைப் பெறுவது, மின்னஞ்சல் முகவரி பதிவு செய்வது மற்றும் கிரெடிட் கார்டு எண்ணைப் பெறுவது ஆகிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தவறான பயன்பாட்டைத் தடுக்க வழி செய்வதாகவும் அந்நிறுவனம் தெரிவிக்கிறது.
இதுவரை ஒரு முறைகூட நகல் சாவி தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகப் புகார் இல்லை என்றும் சொல்கிறது.