ரிப்பன் மாளிகை வளாகத்தின் புதிய கட்டிடத்தின் பெயர் ‘அம்மா மாளிகை ‘ . மேயர் சைதை துரைச்சாமி

amma maaligaiசென்னை மாநகராட்சியின் சார்பில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்திற்கு ‘அம்மா மாளிகை’ என்ற பெயர் சூட்ட சென்னை மாநகராட்சியில் சிறப்பு தீர்மானம் ஒன்று நேற்று நிறைவேற்றப்பட்டது.

நேற்று நடந்த சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் மேயர் சைதை துரைசாமி சிறப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தில் அவர் கூறியதாவது:

தலைவர்கள் தோன்றுவதில்லை உருவாக்கப்படுகிறார்கள் என்று ஒரு தத்துவம் உண்டு! உருவாக்கப்படுவதில்லை, தலைவர்கள் தோன்றுகிறார்கள் என்றும் ஒரு சித்தாந்தம் உண்டு! பிறவித் தலைவன் பிறவி அறிஞன் பிறவிக் கலைஞன் என்ற வகையில் ஒரு சிலரை சரித்திரம் வர்ணிப்பதுண்டு.

பிறந்தோர் அனைவரும் சிறந்தோர் ஆவதில்லை சிறந்தோர் அனைவருமே மக்கள் மனங்களில் நிறைந்தோர் ஆவதில்லை நிறைந்தோர் எல்லோரும் மனித நெஞ்சங்களில் நிரந்தரம் ஆவதில்லை. ஆனால் பிறந்து, சிறந்து, நிறைந்து கோடானுகோடி நெஞ்சங்களில் நிரந்தரமாய் நிற்பது அம்மா எனும் மூன்றெழுத்து மந்திரம்தான்! கண்ணிமையாய் கன்னித்தமிழ் பூமியை காப்பதோடு தன் இமையாய் தலைநகர் சென்னையை காத்து நிற்கிறார் நம் அன்னைத் திருமகள் ஜெயலலிதா.

மக்களுக்கு பல அரியவகை பணி செய்து பரிவோடு சென்னையை பேணி பாதுகாக்கின்ற பேராற்றல் தாயின் திருப்பெயரை சென்னைப் பட்டணத்தின் வெள்ளை மாளிகையாம் ரிப்பன் கட்டிட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய மாளிகைக்கு சூட்டி பெருமை கொள்கிறது. சென்னை மாநகராட்சியின் ‘‘அம்மா மாளிகை’’ இனி சென்னையின் புதிய அடையாளமாக திகழும். என்பதை மிக்க பெருமையோடும் பெருமிதத்துடனும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் இந்த சிறப்பு தீர்மானம் நிறைவேறியது. இதனை முறைப்படி மேயர் சைதை துரைசாமி மன்றத்தில் அறிவித்த உடன், கவுன்சிலர்கள் மேஜையை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த தீர்மானம் அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இறுதி ஆணை பெறப்படும் என்று தெரிகிறது.

Leave a Reply