ஆந்திராவின் புதிய தலைநகரம் ‘அமராவதி’. பிரதமர் அடிக்கல் நாட்டினார்
ஒருங்கிணைந்த ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பிரிந்த பிறகு, ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரை உருவாக்க கடந்த சில மாதங்களாக பெரும் முயற்சி செய்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, நேற்று ஆந்திர மாநில புதிய தலைநகராக உருவாக இருக்கும் அமாராவதி என்ற நகருக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். இந்த விழாவில் பாரத பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
புதிய தலைநகருக்காக ஆந்திரா முழுவதும் இருந்து 16 ஆயிரம் கிராமங்களில் இருந்து மண் எடுத்து வரப்பட்டு ஹெலிகாப்டர்கள் மூலம் அமரவாதியில் தூவப்பட்டன. அதோடு புனித நீரும் ஹெலிகாப்டர் மூலம் தெளிக்கப்பட்டது.
நேற்று காலை 11.55 மணிக்கு, விழா நடைபெறும் இடத்துக்கு விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி வந்தார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர். சரியாக 12.45 மணிக்கு பிரதமர் மோடி, அமரவாதி நகரத்துக்கான அடிக்கலை நட்டு வைத்தார்.
இந்த விழாவில் தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ், மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, நிர்மலா சீத்தாராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். லட்சக்கணக்கான பொதுமக்களும் விழாவில் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
இன்னும் ஒருசில வருடங்களில் ‘அமராவதி’ என்ற இந்த புதிய தலைநகரம் உருவாகிவிடும் என கூறப்படுகிறது.