நேரு- குடும்பத்தைச் சாராதவர், காங்கிரஸ் கட்சிக்கு தலைமை தாங்கும் காலம் விரைவில் வரும் என மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இதனால் காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 1998ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து வரும் சோனியா காந்தி, தனக்கு பின்னர் தன்னுடைய மகன் ராகுல்காந்தி கட்சியின் அடுத்த தலைவராக வருவதற்குண்டான காய்களை நகர்த்தி வருகிறார்.
2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்தல் நடக்கவுள்ளது. இந்த தேர்தலில் ராகுல் காந்தியை முன்னிறுத்தவே அவருக்கு தற்போது காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் மிக விரைவில் நேரு குடும்பத்தை சாராத ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராகும் நாள் வரும் என்றும் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
ஆனால் தனக்கு வயதாகிவிட்ட காரணத்தால் காங்கிரஸ் கட்சியின் தலைமைப்பதவி மீது எவ்வித ஆசையும் இல்லை என்றும் கூறிய அவர், காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவிக்கு சச்சின் பைலட் போன்ற இளம் தலைவர் பொறுப்பை ஏற்க தாம் விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
ராகுல்காந்தி, மற்றும் பிரியங்கா காந்தி ஆகிய இருவரும் பத்திரிகையாளர்களையும், தொண்டர்களையும் அடிக்கடி சந்தித்து பேசவேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.