வங்கக்கடலில் புதிய புயல். மேலும் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்.
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வரும் நிலையில் அந்தமான் தீவு அருகே ஏற்பட்ட புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று வானிலை அறிக்கை தெரிவிக்கிறது. மேலும் வங்க கடலில் புதிய புயல் சின்னம் உருவாகி உள்ளதாகவும், இந்த புயல் சின்னம் சென்னைக்கு தென்கிழக்கே ஆயிரத்து 250 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கனகழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒருசில இடங்களில் பள்ளிக்கு விடுமுறை அளிக்க அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று நடைபெறவிருந்த தேர்வுகளை அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் சென்னை பல்கலைக் கழகம் ஒத்திவைத்துள்ளன. அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் நவம்பர் 12, 13 மற்றும் 14-ம் தேதிகளில் நடைபெறவிருந்த தேர்வுகள் டிசம்பர் 21, 22 மற்றும் 24-ம் தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.
சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்து அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்வு மீண்டும் எப்போது நடத்தப்படும் என்ற தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பல்கலைக்கழக துணை வேந்தர் தெரிவித்துள்ளார்.