வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புயல் சின்னமாக மாறியது. இதனால் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு வங்ககடலில் கடந்த வாரம் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி அதே இடத்தில் நிலை கொண்டு இருந்தது. காற்றழுத்த தாழ்வு பகுதியானது புயல் சின்னமாக மாறும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்தது. என்றாலும் மேல் அடுக்கு சுழற்சியில் காற்றின் போக்கில் மாற்றம் ஏற்பட்டதால் அது காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே இருந்தது.
இப்போது அது புயலாக மாறியுள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயலுக்கு மாதி என பெயரிடப்பட்டுள்ளது. புயலின் தாக்கத்தால் அடுத்த 24 மணி நேரத்திற்கு அந்தமான் தீவுகள், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாதி புயல் சென்னையில் இருந்து 500 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளது. இதன்காரணமாக சென்னை மற்றும் புதுச்சேரியில் 1-ம் நிலை புயல் எச்சரிக்கை குண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.