முல்லை பெரியாறு அணை விஷயத்தில் தமிழகத்துடன் மோத விரும்பவில்லை. கேரள முதல்வர்
கேரளாவில் உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணையை கட்டுவது குறித்து தீவிரம் காட்டி வந்த நிலையில் தற்போது அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் புதிய அணை கட்டும் விஷயத்திலும் கருத்துமாற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு முழு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே புதிய அணை கட்ட முடியும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதனால் முல்லை பெரியாறு பிரச்சனை விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேரளாவின் புதிய அமைச்சரவைக்கு திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் முதல்வர் பினராயி விஜயன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் பினராயி விஜயன், ”முல்லைப்பெரியாறு அணை பலமாக இருப்பதாக சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. நமது அரசுக்கு அதில் உடன்பாடு இல்லை. அணை பலமாக இல்லை என்பதை நாம் சுப்ரீம் கோர்ட்டில் நிரூபிக்க வேண்டும். அதற்கு சர்வதேச நிபுணர்கள் குழு, அணையின் பலத்தை ஆய்வு செய்ய வேண்டும். அதன்பிறகு கேரள அரசு தனது திட்டத்தை மத்திய அரசிடம் தெரிவிக்கும்.
மேலும், முல்லைப்பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்டும் விஷயத்தில் இந்த அரசின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. முந்தைய கோரிக்கையில் இருந்து நாங்கள் பின்வாங்கவில்லை. நானோ அல்லது எனது அரசோ புதிய அணை தேவையில்லை என்ற கருத்து கொண்டவர்கள் அல்ல. அதில் எந்த சர்ச்சையும் கிடையாது. புதிய அணை கட்ட வேண்டும் என்பதுதான் எனது கருத்து. எனது அரசின் கருத்தும் அதுதான்.
ஆனால், அண்டை மாநிலமான தமிழகத்தின் ஒத்துழைப்பும், ஆதரவும் இருந்தால் மட்டுமே அது சாத்தியம் ஆகும். இந்த பிரச்னையில், தமிழகத்துடன் மோதலில் ஈடுபடுவது பிரச்னைக்கு தீர்வு ஆகாது. பேச்சுவார்த்தை மூலமே இதற்கு தீர்வு காணப்பட வேண்டும். தமிழகத்துடன் எந்தவித பதற்றமும் உருவாக நாங்கள் விரும்பவில்லை. நல்லுறவை பராமரிக்கவே விரும்புகிறோம்” என்று கூறினார்.
Chennai Today News: New dam is possible only with TN cooperation