நிலக்கரிச் சுரங்க ஊழல் தொடர்பான வழக்கில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் விசாரணை நடத்த சிபிஐ போலீஸாருக்கு டில்லி சிறப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவுக்கு பாரதிய ஜனதா கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து இதுவரை எந்த ரியாக்ஷனும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று புதுடில்லி சிபிஐ நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா டில்லியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: இந்த விவகாரத்தில், குற்றம் இழைத்தது யார் என்பதைஆராய்ந்தால், இறுதியில் முந்தைய பிரதமர் அலுவலகத்தைத்தான் அனைத்து விசாரணையும் சென்றடையும் என பாஜக கூறியிருந்தது. ஏனெனில், நிலக்கரித் துறை அமைச்சராக அப்போது மன்மோகன்சிங் தான் இருந்தார். ஆகையால், இந்த விவகாரத்தில் நாங்கள் தெரிவித்ததைத்தான் நீதிமன்றமும் தற்போது உறுதி செய்துள்ளது.’ என்றார்.
பாஜக மூத்த தலைவர் நளின் கோலி தெரிவிக்கையில், “சட்டம் அனைவருக்கும் சமமானது. நீதிமன்றம் என்ன உத்தரவிட்டிருக்கிறதோ, அதை அனைவரும் பின்பற்ற வேண்டும்’ என்றார்.
அதேசமயம், தில்லியில் செய்தியாளர்களிடம் காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி பேசுகையில், “நீதிமன்றத்தின் உத்தரவு நகலுக்காக காத்திருக்கிறோம். அது கிடைத்ததும், அதைப் படித்து பார்த்தபிறகு எங்கள் கருத்தைத் தெரிவிப்போம்’ எனத் தெரிவித்தார்.