ஈராக் மற்றும் சிரியா நாடுகளில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் இயக்கம், பயங்கரவாதம் செய்து அந்நாட்டு அரசுகளை பெரும் நெருக்கடி ஏற்படுத்தி வருகிறது. மேலும் அவ்வப்போது தாங்கள் பிடித்து வைத்திருந்த பணயக்கைதிகளின் கழுத்தை அறுத்து கொலை செய்து அதன் வீடியோக்களையும் இணையத்தில் பதிவு செய்து அதிர்ச்சி அளித்து வருகின்றன. இந்நிலையில் இதுவரை இளைஞர்களை மட்டும் தீவிரவாத இயக்கத்தில் சேர்த்து வந்த ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம், தற்போது சிறுவர்களுக்கும் பயிற்சி கொடுத்து வருவதாக அதிர்ச்சி தரும் செய்திகள் வெளிவந்துள்ளன.
சமீபத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த உளவாளி ஒருவரை 10 வயது சிறுவன் கொலை செய்வது போன்ற காட்சிகள் அடங்கியுள்ளது. இந்த வீடியோவில் 19 வயது முகமது சயீத் என்ற உளவாளியை ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தை சேர்ந்த பத்து வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டு எந்தவித பதட்டமும், அச்சமும் இன்றி கொலை செய்கிறான். இந்த வீடியோ பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பத்து வயதே ஆன இந்த சிறுவன் தனக்கு எதிரே ஆரஞ்சு நிறத்தில் உடையணிந்து முழங்கால் போட்டு உட்கார்ந்திருந்த பணயக்கைதியின் முன்னே துப்பாக்கியை நீட்டி நிதானமாக சுடும் காட்சி காண்போரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த கொடுஞ்செயலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.