சபரிமலை: சபரிமலையில் 130 கிலோ தங்கத்தில் புதிய கொடிமரம் அமைக்க தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் பங்குனி உத்திர திருவிழா நிறைவு பெற்றதும் தொடங்கும். சபரிமலையில் அண்மையில் நடைபெற்ற தேவபிரஸ்னத்தில், தற்போதைய கொடிமரம் பழுதாகியுள்ளதால் புதிய கொடிமரம் அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இதை தொடர்ந்து கொடிமரம் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கியது. தற்போது ஐம்பொன்னிலான கொடிமரம் உள்ளது. புதிய கொடிமரத்தை தங்கத்தில் அமைக்க தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. மொத்தம் 130 கிலோ தங்கத்தில் எஸ்டிமேட் தயாரிக்கப்பட்டுள்ளது.
சில பக்தர்கள் நன்கொடையாக தங்கம் தர முன்வந்துள்ளதாகவும், மீதத்திற்கு தேவசம்போர்டின் கையிருப்பில் உள்ள தங்கம் பயன்படுத்தப்படும் என்றும் தேவசம் போர்டு உறுப்பினர் சுபாஷ்வாசு கூறினார். கொடிமரத்துக்கான தேக்குமரம் ஐயப்பா சேவா சங்கம் தருவதாக தெரிவித்துள்ளது. பாலக்காடு வனப்பகுதியில் இருந்து சரியான அளவுள்ள தேக்குமரம், ஆசாரவிதிகளுக்கு உட்பட்டு வெட்டப்பட்டு சன்னிதானத்துக்கு கொண்டுவரப்படும் என்று ஐயப்பா சேவாசங்கம் தெரிவித்துள்ளது.இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா வரும் மார்ச் இறுதியில் தொடங்கும். இந்த விழா முடிந்ததும் புதிய கொடிமரம் அமைக்கும் பணி தொடங்கும் என்று தேவசம்போர்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.