புதிய பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பம் செய்பவர்களுக்கு 7 நாளில் பாஸ்போர்ட் கிடைக்க வழிவகை செய்யப்படும் என பாஸ்போர்ட் அலுவலக வட்டாரங்கள் கூறியுள்ளன.
இது பற்றி பாஸ்போர்ட் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியபோது,
பொதுமக்கள் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தால் போலீஸ் விசாரணை நடத்தி முடித்து அறிக்கை கிடைக்க 3 நாட்களுக்கு மேல் ஆகி விடுகிறது. சென்னையில் உடனே தகவல் வந்து விடும். ஆனால் கிருஷ்ணகிரி, காஞ்சீபுரம், வேலூர் உள்பட அதிக தொலைவில் உள்ள ஊர்களில் இருந்து போலீஸ் விசாரித்து தகவல் அனுப்ப காலதாமதம் ஆகி விடுகிறது.
இதை தவிர்க்க விசாரணை நடத்தும் போலீசாருக்கு இண்டர்நெட் வசதியுடன் ‘டேப்’ இருந்தால் அனைத்து விவரங்களையும் அதில் பதிவு செய்து உடனுக்குடன் போலீஸ் கமிஷனர் அலுவலகம் மூலம் பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு தகவல் வந்து விடும்.
இதனால் 3 நாளில் போலீஸ் விசாரணை முடிக்கப்பட்டு விடும். பொதுமக்களுக்கும் பாஸ்போர்ட் சீக்கிரம் கிடைக்க வழிவகை காணப்படும்.
இது பற்றி போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
பாஸ்போர்ட் தொடர்பாக விசாரணை நடத்தும் ஒவ்வொரு போலீஸ் நிலைய போலீசாருக்கும் ‘டேப்’ வழங்கினால் அதற்கு எவ்வளவு செலவாகும். இதை எல்லா போலீஸ் நிலையங்களுக்கும் அமுல்படுத்த முடியுமா? அல்லது படிப்படியாக அமுல்படுத்துவதா? என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.