தமிழக சட்டசபை நாளை கூடுகிறது. புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு
நேற்று முதல்வர் ஜெயலலிதா மீண்டும் ஆறாவது முறையாக முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டார். அவருடன் 28 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். இந்நிலையில் புதியதாக தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் பதவியேற்பதற்காக நாளை தமிழக சட்டசபை கூடுகிறது. புதிய எம்.எல்.ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் செம்மலை பதவிப்பிரமாணம் செய்து வைக்கின்றார். இவர்களுடன் புதியதாக நியமனம் செய்யப்பட்ட நான்கு அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய எம்.எல்.ஏக்கள் உறுதிமொழி அல்லது பிரமாணம் எடுத்துக்கொள்ள வரும்போது, சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சான்றிதழை தவறாமல் எடுத்து வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப் பேரவையின் தலைவர், துணைத் தலைவர் ஆகியோருக்கான தேர்தல் வருகின்ற ஜூன் 3-ம் தேதியன்று காலை 10 மணிக்கு நடைபெறும் என்றும் ஜமாலுதீன் அறிவித்துள்ளார். இது புதிய சட்டப் பேரவையின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் ரோசய்யா உரையாற்றுவார். இதையடுத்து, நிகழ் நிதியாண்டுக்கான தமிழக அரசின் முழு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். துறை வாரியான செலவினங்களுக்கும் பேரவையின் ஒப்புதல் பெறப்படும் என்று தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.