மியான்மர் ஆட்சி மாற்றம் எதிரொலி: 100க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் விடுதலை
மியான்மர் நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் ஆங் சான் சூ கி-யின் தலைமையிலான கட்சி மாபெரும் வெற்றி பெற்று புதிய அரசு ஏற்பட்டதை அடுத்து அந்நாட்டி சிறையில் தண்டனை அனுபவித்து வரும் அரசியல் கைதிகளை படிப்படியாக விடுதலை செய்ய அதிபர் ஹிதின் கியாவ் உத்தரவு இட்டுள்ளார். முதல்கட்டமாக போராட்டத்தில் ஈடுபட்டு கைதான 69 மாணவர்கள் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். இதனால் 69 மாணவர்களின் பெற்றோர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ள 69 மாணவர்களும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு தழுவிய அளவில் நடைபெற்ற போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டு கடந்த ஒரு வருடமாக வடக்கு யாங்கூனில் உள்ள தாராவாடி சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இதனால் மாணவர்களின் எதிர்காலம் வீணாகி வருவதால் அவர்களின் பெற்றோர்கள் கவலையடைந்த நிலையில் தற்போது அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதுமட்டுமின்றி மேலும் 100 அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்ய அதிபர் ஹிதின் கியாவ் உத்தரவிட்டுள்ளதாகவும், அவர்களும் இன்னும் ஒருசில நாட்களில் சிறையில் இருந்து விடுதலை ஆவார்கள் என்றும் ஆங் சான் சூ கியின் அலுவலக செய்தித் தொடர்பாளர் ஸா ட்டே அவர்கள் கூறியுள்ளார். மியான்மரின் ராணுவ ஆட்சி முடிந்து ஜனநாயக ஆட்சி ஏற்பட்டவுடன் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கப்படுவதாகவும், நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் தற்போது இருப்பதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Chennai Today News: New Myanmar government frees scores of jailed activists