விடை பெற்றார் ரோசய்யா. தமிழகத்தின் புதிய கவர்னர் குறித்த முக்கிய தகவல்
தமிழக கவர்னர் ரோசய்யாவின் பதவி காலம் இன்றுடன் முடிவடைகிறது. ஆனாலும் அவரே கவர்னராக தொடருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழகத்தின் ஆளுநர் பொறுப்பை மகாராஷ்டிரா ஆளுநர் வித்யாசாகர் ராவ் கூடுதலாக கவனிப்பார் என்று குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அறிவித்துள்ளார்.
ஆந்திரா முன்னாள் முதல்வர் ரோசய்யா கடந்த 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி தமிழக கவர்னராக பதவியேற்றார். பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி பொறுப்பேற்றதும் பல மாநில கவர்னர்கள் மாற்றப்பட்டபோதிலும் தமிழக கவர்னராக ரோசய்யா தொடர்ந்தார் என்பதே ஒரு சாதனை.
முதலமைச்சர் ஜெயலலிதாவுடனும் மத்திய அரசுடனும் அவர் இணக்கமாகவும் அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் ஒத்துழைத்ததால் கவர்னர் பதவியில் தொடர்ந்தார். இந்நிலையில் ரோசய்யாவின் பதவி காலம் இன்றுடன் (ஆகஸ்ட் 31ஆம் தேதி) முடிவடைந்தது. மீண்டும் கவர்னராக ரோசய்யா நீடிப்பார் என்றும் தகவல் வெளியான நிலையில் தமிழகத்தின் புதிய ஆளுநர் பொறுப்பை மகாராஷ்டிரா ஆளுநர் வித்யாசாகர் ராவ் கவனிப்பார் என்று குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அறிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த 71 வயது வித்யாசாகர் ராவ் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய உள்துறை இணை அமைச்சராகப் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அதுமட்டுமின்றி மக்களவைக்கு 2 முறையும், ஆந்திர மாநில எம்.எல்.ஏவாக 3 முறையும் தேர்வு செய்யப்பட்டவர்