கர்ப்பப்பை கட்டியை நீக்க புதிய சிகிச்சை!

cervical-cancer

ஃபைப்ராய்டு. பெண்களுக்கு கர்ப்பப் பையில் ஏற்படுகிற ஒருவகை நார்த்திசுக் கட்டியின் மருத்துவப் பெயர் இது. பத்தாண்டுகளுக்கு முன்பு வரை 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களை மட்டுமே தாக்கிக்கொண்டிருந்த இந்த நோய், இப்போது இளம் வயது பெண்களுக்கும் வருகிறது என்பது கவலைக்குரிய செய்தி.

ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாகச் சுரக்கும் பெண்களுக்கு நடுத்தர வயதுக்குப் பிறகு ஃபைப்ராய்டு கட்டி ஏற்படுவது வழக்கம். ஆனால் ‘இன்றைய இளம் பெண்களுக்கு உடற்பயிற்சி குறைந்துவிட்டதாலும் உணவு முறை மாறிவிட்டதாலும் உடல் பருமன் ஏற்படுவது அதிகமாகி விட்டது, இவர்களுக்கு உடலில் அதிகப்படியாக இருக்கும் கொழுப்பிலிருந்து ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் வயதுக்கு மீறிச் சுரக்கிறது. இதன் விளைவாக இளம் வயதிலேயே ஃபைப்ராய்டு வருகிறது’ என்கிறது ஒரு மருத்துவ ஆய்வு.

அசைவ உணவுகளை அதிக மாகச் சாப்பிடும் பெண்களுக்கு இது வரலாம். இன்று பால் முதல் இறைச்சி வரை அனைத்தையும் கொடுக்கும் விலங்குகளுக்கு ஹார்மோன் ஊசிகள் போடப் படுவது வாடிக்கையாகி விட்டது. அவற்றை உண்கிற வர்களுக்கு அந்த ஹார் மோன்களின் தாக்கம் இருப்பதும் ஒரு காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள்.இது பரம்பரையாகவும் ஏற்படலாம். குடும்பத்தில் பாட்டி, அம்மா, சித்தி, பெரியம்மா என்று யாருக்காவது ஃபைப்ராய்டு கட்டி வந்திருந்தால், அந்தக் குடும்பத்தில் பிறக்கும் பெண்களுக்கு இது வரும் அபாயம் அதிகம் உள்ளது.

சரி, இதன் அறிகுறிகள்தான் என்ன?

ஃபைப்ராய்டு கட்டியின் ஆரம்பநிலையில் எந்தவொரு அறிகுறியும் தெரியாமல் இருக்கலாம். கட்டி சிறிதளவு வளர்ந்த பிறகு, இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, மாதவிலக்கு அதிக அளவு போகும்; நிறைய நாட்களுக்கு நீடிக்கும். சிலருக்கு மாதவிலக்கு தற்காலிகமாக நின்றுவிடுவதும் உண்டு. மாதவிலக்கு நாட்களில் அடிவயிற்றில் வலி மிகவும் கடுமையாக இருக்கும். அடிவயிறு கனமாகத் தெரியும். சிறுநீர் அடிக்கடி சிறிது சிறிதாகப் போகும். மலச்சிக்கல் ஏற்படும். கீழ் முதுகுவலி தொல்லை கொடுக்கும். ரத்தசோகை ஏற்படலாம்.

இந்தக் கட்டிகளில் மூன்று விதம் உண்டு. கர்ப்பப்பையின் உள்பகுதியில் வளர்வது ஒருவகை. கர்ப்பப் பையின் வெளிச்சுவரில் வளர்வது அடுத்த வகை. கர்ப்பப்பையின் தசைச்சுவர் இடுக்கில் வளர்வது மூன்றாம் வகை. இவற்றில் முதலாம் வகை கட்டி வந்துவிட்டால், கர்ப்பப் பைச்சுவரில் கருமுட்டை வளர்வதைத் தடுக்கும் என்பதால் குழந்தைப்பேறு உண்டாவதைப் பாதிக்கும். சிலருக்கு இது சினைக்குழாயையும் பாதித்து குழந்தைப்பேறு அடைவதைத் தடுக்கும். இம்மாதிரியானவர் களுக்கு கட்டியை ஆரம் பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை தருவது அவசியம்.

வயிற்றை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மற்றும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்துப் பரிசோதிப்பதன் மூலம் கர்ப்பப்பையில் கட்டி உள்ளதா என்று தெரிந்து கொள்ளலாம். அதன் இருப்பிடம், எண்ணிக்கை மற்றும் அளவைத் துல்லியமாகத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளலாம்.4 அல்லது 5 செ.மீ. அளவுள்ள கட்டியை லேப்ராஸ்கோப் அறுவைச் சிகிச்சையில் அகற்று வது நடைமுறை. அந்த அளவுக்கு மேல் கட்டி பெரிதாக இருந்தால், கர்ப்பப்பையையும் சேர்த்து அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டியது வரலாம்.

ஆரம்பநிலையில் உள்ள கட்டியைக் கரைக்க GnRH analogs எனும் ஊசி உள்ளது. இதை மாதம் ஒருமுறை என மொத்தம் மூன்று மாதங்களுக்குப் போட வேண்டும். ஆனால் இது நிரந்தரத் தீர்வு தராது. தற்காலிக மாக கட்டியைச் சுருக்கி விடும். சில மாதங்களுக்கு அல்லது சில வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கட்டி வளர்ந்து விடும். இப்போது ஃபைப்ராய்டு கட்டிக்கு ஊசியும் இல்லாமல் அறுவை சிகிச்சையும் இல்லாமல் சில மணி நேரத்தில் கரைத்து விடக்கூடிய புதிய சிகிச்சை முறை ஒன்று அறிமுக மாகியுள்ளது. இதன் பெயர் எம்ஆர்ஜிஎஃப்யூஎஸ் – MRgFUS (MR guided Focused Ultrasound Surgery).

இந்த சிகிச்சையை எப்படிச் செய்கிறார்கள்?

பயனாளியின் கர்ப்பப்பையை எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவியுடன் இணைக்கப்பட்ட கணினித் திரையில் பார்த்துக்கொண்டே, அதிலுள்ள ஃபைப்ராய்டு கட்டியை மட்டும் குறிவைத்து அல்ட்ரா சவுண்ட் அலைகளை அனுப்புகிறார்கள். இந்த அலைகளுக்கும் சாதாரணமாக வயிற்றை அல்ட்ரா சவுண்ட் மூலம் பரிசோதிக்கும்போது அனுப்பப்படும் அலைகளுக்கும் நிறைய வித்தியாசமுண்டு. இந்த அலைகளின் அடர்த்தியும் வேகமும் கூடுதல் என்பதால் திசுக்களைத் தீவிரமாகத் தாக்கும் குணமுள்ளவை.

எப்படிச் சூரிய ஒளியை ஒரு குவிலென்ஸ் மூலம் காகிதத்தில் புள்ளிபோல் குவித்தால் அந்தக் காகிதம் எரிந்துவிடுகிறதோ, அந்த மாதிரி தான் இந்தக் கேளாஒலி அலைகளை கர்ப்பப்பையில் உள்ள திசுக்களின்மீது குவித்தால் அந்தத் திசுக்கள் பொசுங்கி விடும். இப்படிப் பொசுங்கிய திசுக்களை கர்ப்பப்பையானது சிறிது சிறிதாக கிரகித்துக்கொள்ளும்.

கட்டியின் அளவைப் பொறுத்து ஒரு மணி நேரத்திலி ருந்து நான்கு மணி நேரத்துக்குள் மொத்த சிகிச்சையும் முடிந்துவிடும். இந்தச் சிகிச்சையின் போது பயனாளிக்கு மயக்கம் தரப்படுவதில்லை. தேவைப் பட்டால் சிறிது நேரத்துக்கு தூக்கம் வருவதற்கு ஊசி போடப்படும். வெளிநோயாளி யாகவே சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். லேப்ராஸ்கோப் போன்ற மற்ற சிகிச்சைகளின் போது சில வாரங்கள் வரை ஓய்வு தேவைப்படும்.

ஆனால், இந்த சிகிச்சையைப் பெற்றுக்கொண்ட மறுநாளே வேலைக்குச் சென்றுவிடலாம். பொதுவாக 2 மில்லி மீட்டர் அளவுள்ள கட்டிகளை இந்தச் சிகிச்சையில் கரைத்துவிடலாம். வழக்கத்தில் புற்றுக்கட்டிகளுக்குக் கதிர்வீச்சு சிகிச்சை தரப்படுவது உண்டு. அப்போது கதிர்வீச்சானது அருகிலுள்ள ஆரோக்கியமான திசுக்களையும் பொசுக்கி விடக்கூடிய ஆபத்தும் உண்டு. ஆனால் இதில் அந்த ஆபத்து நேராது. மீண்டும் கட்டி வளர்ந்துவிடுமோ என்ற பயமும் தேவையில்லை. இது சென்னையிலும் மேற்கொள்ளப் படுகிறது என்பது ஒரு கூடுதல் தகவல்.

Leave a Reply