நியூசிலாந்து பிரதமர் சமீபத்தில் உணவு விடுதி ஒன்றுக்கு சென்றிருந்தபோது அங்கு பணிபுரிந்த பணிப்பெண்ணின் கொண்டையை இழுத்து விளையாடிய சம்பவம் நியூசிலாந்து நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்காகநியூஸிலாந்து பிரதமர் ஜான் கீ, அந்தப் பணிப்பெண்ணிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டதாக நியூசிலாந்து ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து அந்தப் பணிப்பெண் சமூல வலைதளத்தில் தெரிவித்துள்ளதாவது:
நான் பணியாற்றும் உணவு விடுதிக்கு வந்த பிரதமர் ஜான் கீ, விளையாடுவதாக நினைத்துக் கொண்டு எனது குதிரைவால் கொண்டையைப் பிடித்து இழுத்தார். ஒரு முறையோடு விட்டுவிடுவார் என்று நினைத்தால் மீண்டும் மீண்டும் அதே காரியத்தை செய்தார்.
எனது விருப்பமின்மையை நான் தெரிவித்த பிறகும் அவர் அவ்வாறு செய்தது எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அவரது பாதுகாவலர்களிடம் “மீண்டும் அவர் என் கொண்டையில் கை வைத்தால் அவரது முகத்தில் குத்து விடுவேன்’ என்று நான் எச்சரித்தேன்.
“பாவம் அந்தப் பெண், விட்டுவிடுங்கள்’ என்று பிரதமரின் மனைவி கூறிய பிறகுதான் அவர் தனது செயலை நிறுத்தினார். சிறுமியைச் சீண்டி விளையாடும் சிறுவனைப் போல் நடந்து கொண்டதுடன், அதுகுறித்து அவர் சிறிதும் அலட்டிக் கொள்ளாதது எனக்கு மேலும் கோபத்தை வரவழைத்தது என்று வலைதளத்தில் அந்த பணிப் பெண் கூறியிருந்தார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் கூறியுள்ளதாவது:
குறிப்பிட்ட அந்த உணவு விடுதிக்கு பிரதமர் ஜான் கீ அடிக்கடி செல்வார். அங்குள்ள பணியாளர்களுடன் சகஜமாகப் பழகுவார். பணிப்பெண்ணிடம் பிரதமர் நடந்துகொண்டது வெறும் வேடிக்கைக்காகத்தான். அது அந்தப் பெண்ணுக்குப் பிடிக்கவில்லை என்பது தெரிந்ததும் பிரதமர் மன்னிப்பு கேட்டார் என்று பிரதமர் அலுவலகம் விளக்கமளித்துள்ளது.
எனினும், எதிர்க்கட்சியினர், “”உணவு விடுதிக்குள் சென்று அங்குள்ள பணிப் பெண்ணின் கொண்டையைப் பிடித்து இழுப்பது நியூஸிலாந்துக்காரர்களின் பண்பாடு அல்ல. பிரதமர் ஜான் கீ அதற்கு விதிவிலக்கல்ல” என விமர்சித்தனர்.
53 வயதாகும் பிரதமர் ஜான் கீ, கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் மூன்றாவது முறையாக பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அண்மையில் நடைபெற்ற கருத்துக் கணிப்பில் அவருக்கு மக்கள் ஆதரவு அதிகமிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், உணவு விடுதிப் பணிப்பெண் தொடர்பான சர்ச்சையில் சிக்கியிருப்பது அவரது செல்வாக்கைக் குறைக்கலாம் எனக் கூறப்படுகிறது.