ரயில் பயணிகள் தங்கள் பயணத்திற்கு தேவையான ரயில் டிக்கெட்டுக்களை மிக எளிதாக இணையதளம் மூலம் பெற புதிய மேம்படுத்தப்பட்ட இணையதளம் ஒன்றை ஐ.ஆர்.சி.டி.சி தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுவரை ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் செயல்படும் விதம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டன. இணையதளம் மிக மெதுவாக செயல்படுவதாகவும், பல நேரங்களில் தங்கள் வங்கிக்கணக்கில் இருந்து பணம் செலுத்தப்பட்டிருந்தும், இணையதளத்தின் கோளாறு காரணமாக டிக்கெட் கிடைக்காமல் இருக்கும் பிரச்சனைகளையும் பயணிகள் சந்தித்து வந்தனர்
இந்த பிரச்னையைத் சரிசெய்வதற்காக புதிய மேம்படுத்தப்பட்ட நவீன டெக்னாலஜியுடன் புதிய இணையதளம் ஒன்றை ஐ.ஆர்.சி.டி.சி. தற்போது அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் நீண்ட நேரம் காத்திருக்காமல் எளிதாகவும், விரைவாகவும் இ-டிக்கெட்டை பயணிகள் சிரமமின்றி பெற்றுக்கொள்ள முடியும்.
இனி www.nget.irctc.co.in. என்ற புதிய இணையதளம் வாயிலாக இ-டிக்கெட்டுக்களை பயணிகள் பெற்றுக்கொள்ளலாம். பழைய இணையதளத்திற்கு பதிலாக இந்த புதிய இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டு தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது.
இந்த புதிய இணையதளம் நவீன டெக்னாலஜியின் மூலம் மிக வேகமாக செயல்படக்கூடியது என்பதால் டிக்கெட் பெற காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த புதிய இணையதளம் பற்றிய தகவல் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தை வழக்கமாக பயன்படுத்தும் பயணிகளுக்கு எஸ்.எம்.எஸ். மற்றும் இமெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ளது என ஐ.ஆர்.சி.டி.சி. அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த புதிய திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 7 லட்சம் இ-டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்ய முடியும். ஏற்கெனவே உள்ள இ-டிக்கெட் பெறும் இணையதளத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் 5 லட்சம் டிக்கெட்டுகள் கையாளப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
கடந்த 2005-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வசதியின் கீழ், கடந்தாண்டு செப்டம்பரில் தான் அதிகபட்சமாக 5 லட்சத்து 71 ஆயிரம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டன என ஐ.ஆர்.சி.டி.சி. தெரிவித்தது.
சராசரியாக 4.5 லட்சம் டிக்கெட்டுகள் இதன் மூலம் முன்பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த புதிய இணையதளத்தின் செயல்பாடுகள் திருப்தியாக இருப்பதாக ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பயணிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.