சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையான ஜெயலலிதா, சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகவின் வேட்பாளராக இருக்கின்றார். அடுத்த வாரம் இந்த தொகுதியில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதே அடுத்த வாரம் ஜெயலலிதா வழக்கின் மேல்முறையீடு தாக்கல் செய்யப்படும் என கர்நாடக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கான ஏற்பாடுகளை அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா முழுவீச்சில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா தனது உதவி வழக்கறிஞர் சந்தேஷ் சவுட்டா உதவியுடன் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டு மனுவை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இருந்து அரசு தரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு சான்று ஆவணங்கள் ஆகியவற்றை அவர் பெற்றூள்ளார்.
மேலும் நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பில் உள்ள முக்கிய அம்சங்கள், நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பின் உள்ள தவறுகள் ஆகியவற்றை விரிவாக ஆராய்ந்து வருவதாகவும் இதனை அடிப்படையாகக் கொண்டு ஜெயலலிதாவுக்கு எதிராக வலுவான மேல்முறையீட்டு மனுவை தயாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேல்முறையீட்டு பணிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டதால் இன்னும் ஒரு வாரத்தில் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேல்முறையீட்டின்போது, நீதிபதி குமாரசாமியின் தீர்ப்புக்கு தடை விதிக்கப்பட்டால், ஜெயலலிதா மீண்டும் பதவியிழப்பதோடு, சிறை செல்ல வேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.