கடந்த வாரம் குமுதம் வார இதழ் நடத்தில் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கு என்ற கருத்துக்கணிப்புக்கு பெருவாரியான ரசிகர்கள் வாக்களித்தனர். ஆரம்பத்தில் இருந்தே அஜீத்துக்குத்தான் ரசிகர்கள் அதிக வாக்குகள் பதிவாகிக்கொண்டிருந்த நிலையில் திடீரென மறுநாள் விஜய் வெற்றி பெற்றார் என்று அறிவிக்கப்பட்டது. இதில் ஏதோ உள்குத்து இருப்ப்பதாக பலர் நினைத்தனர். இந்நிலையில் நேற்று ஒருசில ஊடகங்களில் விஜய் பணம் கொடுத்து இந்த பட்டத்தை வாங்கியதாக செய்திகள் வெளிவந்தன. இதனால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் பட்டம் என்பது ரஜினி ஒருவருக்கே பொருந்தும். அவரை தவிர வேறு யாரையும் சூப்பர் ஸ்டாராக தமிழக திரையுலக ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என ரஜினி ரசிகர்கள் கொதித்தெழுந்தனர்.
விஜய்யும் குமுதம் பத்திரிகையும் இணைந்து இதுமாதிரியான தேவையற்ற கருத்துக்கணிப்பை எடுத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக ரஜினி ரசிகர்கள் ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டரில் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர். புரட்சித்திலகம் என்றால் அது எம்.ஜி.ஆர் ஒருவருக்குத்தான் பொருந்தும். நடிகர்திலகம் என்றால் அது சிவாஜிக்கு மட்டும்தான். அதுபோல் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி மட்டுமே. அந்த பட்டத்தை பகிர்ந்து கொள்ள யாருக்கும் தகுதியில்லை என்று அவர்கள் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
இன்றைய நிலையில் தென்னிந்திய அளவில் அதிக ரசிகர்களை பெற்றிருக்கும் விஜய், இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களில் இறங்கியிருக்க மாட்டார் என்றும், இந்த கருத்துக்கணிப்புக்கும் விஜய்க்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்றும் அவருடைய ஆதரவாளர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். காசு கொடுத்து பட்டம் வாங்கும் அவசியம் இளையதளபதிக்கு இல்லை என்றும் அவர்கள் கருத்து கூறியுள்ளனர்.
குமுதம் பத்திரிகைக்கு அவ்வப்போது ஏதாவது ஒரு பிரச்சனையை கிளறி பரபரப்பு ஏற்படுத்திக்கொண்டிருப்பதே வழக்கம் என்று ஒருசிலர் கருத்து கூறியுள்ளனர்.