அடுத்த தமிழக காங்கிரஸ் தலைவர் குஷ்புவா? மூத்த காங்கிரஸ் தலைவர்கள் அதிர்ச்சி
தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பதவி விலகி பல நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் தலைவர் பதவிக்கு யாரும் நியமனம் செய்யப்படவில்லை. பீட்டர் அல்போன்ஸ் உள்பட பல தலைவர்கள் இந்த பதவியை குறிவைத்துள்ள நிலையில் சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தி தமிழக காங்கிரஸ் தலைவராக யாரை நியமனம் செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு வலுத்துவருகிறது.
இந்நிலையில் நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்திதொடர்பாளருமான குஷ்பு திடீரென ராகுல்காந்தியை இன்று சந்தித்துள்ளார். இதனால் குஷ்பு அடுத்த காங்கிரஸ் தலைவர் ஆவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த குஷ்பூ, தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு அடுத்த தலைவர் யார் என்பது, இன்னும் ஓரி நாளில் தெரிந்து விடும்.. அடுத்த தலைவராக எனக்கு வாய்ப்பு கொடுத்தால், நிச்சயம் ஏற்பேன், சிறப்பாக செயல்படுவேன் ஆனால், அதற்கு சாத்தியம் இல்லை என்றார்.
ப.சிதம்பரம், திருநாவுக்கரசர், சுதர்சன நாச்சியப்பன், பீட்டர் அல்போன்ஸ், எச்.வசந்தகுமார், விஜயதரணி, செல்லக்குமார் என்று அடுத்த தலைவருக்கான பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் கட்சியில் சேர்ந்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் பதவியையும் பெற்ற குஷ்பு தற்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியையும் பெற்றுவிடுவாரோ? என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.