வெனிசூலா அதிபருக்கு எதிராக தேர்தல் சபை. பதவி பறிபோகும் அபாயம்
வெனிசூலா நாட்டின் அதிபராக கடந்த சில வருடங்களாக இருந்து வௌம் நிக்கோலஸ் மதுரோ என்பவருக்கு எதிராக அந்நாட்டின் தேசிய தேர்தல் சபை செயல்பட்டு வருவதால் அவரது பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த சில மாதங்களாகவே வெனிசூலா நாட்டில் கடும் அரசியல், பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில்லை என்றும் பணவீக்கம், உலகிலேயே உச்ச நிலையில் இருப்பதால் ஆளுங்கட்சி மீது பொதுமக்களும் எதிர்க்கட்சிகளும் அதிருப்தியில் உள்ளன.
இந்நிலையில் அதிபர் நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தி வருகின்றன. அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டு வரும் நிலையில் நிக்கோலஸ் மதுரோவை பதவி நீக்கம் செய்வதற்கான முதல்கட்ட நடவடிக்கையாக நாட்டின் 24 மாநிலங்களிலும் ஒரு சதவீத வாக்காளர்களின் கையெழுத்துக்களை எதிர்க்கட்சிகள் பெற்று விட்டன.
இந்த கையெழுத்துக்களை அந்த நாட்டின் தேசிய தேர்தல் சபை அங்கீகரித்து விட்டது. இதனால் நிக்கோலஸ் மதுரோவுக்கு நெருக்கடி முற்றுகிறது. இன்னும் ஒருசில நாட்களில் அவர் பதவி விலக்கூடும் என்று தெரிகிறது.