ஆசிரமத்தில் மிகவும் ஒழுக்கமாக வளர்ந்து வெளியே வரும் ஜெயம் ரவி, தான் படித்த கல்விக்கும், உண்மை நிலவரத்திற்கு சம்மந்தம் இல்லாமல் இருப்பதை பார்த்து கொதித்து எழுந்து எடுக்கும் அதிரடி நடவடிக்கைகளே படத்தின் கதை.
சாமுராய், அந்நியன், இந்தியன், சிட்டிசன் ஆகிய படங்களில் பார்த்த அதே கதையை தான் தன்னுடைய ஸ்டைலில் கொடுத்திருக்கிறார் சமுத்திரக்கனி. நேர்மையான மனிதனாக ஆசிரமத்தில் இருந்து வெளியெ வரும் ஜெயம் ரவி, பைக்கில் செல்லும்போது எல்லாவிதமான ஆவணங்கள் இருந்தும் லஞ்சம் கேட்கப்படுவதால் டிராபிக் போலீசிடம் பிரச்சனை செய்கிறார். லஞ்சம் கொடுக்காத காரணத்தால் போலீஸ், கோர்ட், என அலையவைத்து ஜெயம் ரவிக்கு சிக்கலை ஏற்படுத்துகின்றனர். இதனால் கொதித்து எழும் ஜெயம் ரவி உண்மையான சில அதிகாரிகளின் உதவியோடு லஞ்சம் வாங்கும் போலீஸ், வக்கீல்கள், நீதிபதி என பலரையும் வீடியோ எடுத்து அதை கோபிநாத் உதவியுடன் டிவியில் நேரடியாக ஒளிபரப்ப, பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கிறது.
பாதிக்கப்பட்ட அத்தனை அதிகாரிகளும் ஜெயம் ரவியை வஞ்சம் தீர்க்க சதி செய்கின்றனர். சதியில் சிக்கும் ஜெயம் ரவி மீண்டு வந்தாரா? என்பதே இரண்டாவது பாதி.
முதல்பாதியில் ஜெட் வேகத்தில் செல்லும் திரைக்கதை இரண்டாவது பாதியில் இரண்டாவது ஜெயம் ரவி வந்தவுடன் ஆமை வேகத்தில் நகர்கிறது. மிகவும் சிரியஸாக சென்று கொண்டிருந்த கதையை நரசிம்ம ரெட்டி என்ற ஜெயம் ரவி காமெடியாக்கிவிட்டார். ஜெயம் ரவியின் நடிப்பை பொறுத்தவரை ஓகே. இரண்டு வேடங்களிலும் நல்ல வித்தியாசத்தை காட்டியிருக்கின்றார். அவருடைய உழைப்பு ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது.
அமலாபால் வழக்கமாக எல்லா படத்திலும் வருவது போல ஹீரோவை காதலிக்கவும், டூயட் பாடல்களுக்கும் மட்டும் வருகிறார்.
சூரி அளவொடு கதையோடு ஒட்டி காமெடி செய்வதால் தப்பித்துவிடுகிறார். இந்த படத்தில் அவருக்கு கருப்புத்தங்கம் என்ற பட்டம் வேறு கொடுத்திருக்கின்றனர்.
ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் மனதில் நிற்கவில்லை. ஆனால் பின்னணி இசையை நன்றாக செய்திருக்கிறார். இதுபொன்ற மிக சீரியஸான கதையில் கானா பாட்டு, குத்துபாட்டு போன்ற விஷயங்கள் எல்லாம் தேவைதானா? என்பதை சமுத்திரக்கனி ஏன் சிந்திக்கவில்லை.
பல இடங்களில் காட்சிகள் செயற்கைத்தன்மையாகவும், நம்ப முடியாததாகவும் இருக்கிறது. நன்றாக நிமிர்ந்து நிற்கவேண்டிய ஒரு சிறந்த படம் இரண்டாவது பாதியின் சொதப்பலால் நீர்த்து போகிறது.