சென்ற சனிக்கிழமை காணாமல் போன மலேசியா விமானம் காணாமல் போய் ஐந்து நாட்கள் ஆகியும் தேடுதல் வேட்டையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிறது. இந்நிலையில் விமானம் காணாமல் போன அன்று, அந்த விமானம் மறைந்ததை நேரில் பார்த்ததாக இதுவரை ஒன்பது பேர் வரை பேட்டியளித்துள்ளனர்.
முதலில் வியட்நாமில் ஒரு தொழில் அதிபரும், மீனவர் ஒருவரும் விமானம் கீழே விழுந்ததை பார்த்ததாக கூறினர். விமானம் ஒன்று தீப்பிடித்து எரிந்த நிலையில் கிழே விழுந்ததை பார்த்ததாக மீனவர் அளித்த பேட்டி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதனால் விமானம் வெடித்து சிதறியிருக்கும் என கூறப்படுகிறது.
மேலும், ஒரு வியட்நாமில் உள்ள பேருந்து டிரைவர் ஒருவர் சம்பவம் நடந்த அன்று அதிகாலை 1.45 மணிக்கு தீப்பிழம்பு ஒன்று வானத்தில் தோன்றியதாகவும், அது மெல்ல மெல்ல கடலில் விழுந்ததை பார்த்ததாகவும் கூறியுள்ளார். இவர் கூறியதை போலவே மேலும் ஆறு பேர் விமானம் கீழே விழுந்ததையும் அந்த நேரத்தில் மிகவும் பிரகாசமான ஒளிப்பிழம்பு ஒன்று தோன்றியதாகவும் கூறியுள்ளனர்.
இதுவரை ஒன்பது பேர் ஒரே மாதிரியான கருத்தை கூறியதால் விமானத்தை தேடும் பணியில் உள்ளவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.